குடியரசு தின வாகன அணிவகுப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜகவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
நேற்று முன்தினம்(ஜனவரி 28), தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன் யாதவ், “குடியரசு தின அணிவகுப்பில் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் இருந்தனர். நாட்டின் போலி தந்தையோ அல்லது போலி மாமாவோ அல்லது இரும்புப் பெண்மணியோ அல்லது கணினியைக் கண்டுபிடித்தவரோ அணிவகுப்பில் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், “அணிவகுப்பில் காசி விஸ்வநாதர் மற்றும் வைஷ்ணோ தேவி சிலைகள் இருந்தன. இது சனாதன பண்பாட்டின் சாட்சி. என் நாடு உண்மையிலேயே மாறி வருகிறது. ஆங்கிலேயர்களுடைய அடிமைகளின் பிடியில் இருந்து வெளியே வந்துக்கொண்டிருக்கிறது. என் நாடு உண்மையிலேயே சுதந்திரம் பெற்று வருகிறது” என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.
இந்த ட்வீட் சர்ச்சையானதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை தன் பக்கத்தில் இருந்து மோகன் யாதவ் நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளர் பூபேந்திர குப்தா, “பிரிட்டிஷாரிடம் இருந்து 60 ரூபாய் ஓய்வூதியமாக வாங்கியவர்களின் அரசியல் வாரிசுகள் சுதந்திரத்தை மதிப்பார்கள் என்று நாம் எண்ணக்கூடாது. சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கிற்கு எதிராக நின்றவர்களும், சுபாஷ் சந்திரபோஸின் ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேரவிடாமல் நாட்டு மக்களைத் தடுத்தவர்களும் எப்படி சுதந்திரத்தை மதிப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆனால், நாங்கள் அவர்களை ஜெயிக்க விடமாட்டோம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி மோகன் யாதவ் மன்னிப்புக் கேட்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தி குறித்து திரைக்கலைஞர் கங்கனா ரணாவத்தின் கருத்து – மீண்டும் உருவெடுத்த சர்ச்சை
மேலும், மோகன் யாதவ் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் பூபேந்திர குப்தா வலியுறுத்தியுள்ளார்.
மோகன் யாதவ்வின் ட்வீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம்(ஜனவரி 28), உஜ்ஜயினியில் மோகன் யாதவின் உருவ பொம்மையை எரித்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.