Aran Sei

போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறாரா எல்.முருகன்? – போட்டியிடபோவதில்லை என ம.பி காங்கிரஸ் அறிவிப்பு

டுத்த மாதம் நடக்கவுள்ள மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. காரணம், அம்மாநில முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த போவதில்லை என்று அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, பாஜகவின் தமிழ்நாட்டு தலைவராக இருந்த எல்.முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாமல், பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்கள், ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும்.

அர்ஜுன மூர்த்தி மீண்டும் பாஜகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் – எல்.முருகன்

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 18), வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடக்கவுள்ள, மத்திய பிரதேசத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கான வேட்பாளராக எல்.முருகனின் பெயரை பாஜக அறிவித்திருந்தது.

கடந்த ஜூலை மாதம், அப்போதைய ஒன்றிய அமைச்சர் தவார்சந்த் கெஹ்லாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால், மத்திய பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 19), பிடிஐ-யிடம் பேசிய மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா,  “இத்தேர்தலில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்பாளரையும் நிறுத்த வேண்டாம் என்று மத்திய பிரதேச கமிட்டியின் தலைவரும் சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவருமான கமல்நாத்ஜி முடிவு செய்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

‘பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றதுண்டா?’ – எல்.முருகனுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

எல்.முருகனின் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் சாதி மோர்ச்சாவின் தேசிய தலைவர் லால் சிங் ஆர்யா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கைலாஷ் விஜயவர்க்கியா மற்றும் உமா பாரதி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்துள்ளன.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்