Aran Sei

‘ஆக்சிஜன் தயாரிப்பு எனில் ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக தமிழக அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக திறந்து செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 26), எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அப்பகுதி மக்களில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்ச காற்றை வெளிப்படுத்திய காரணத்தினால் அதனை மூட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி, இறுதியாக 13 உயிர்களை இழந்த பிறகு அந்த ஆலை மூடப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டியுள்ளார்.

“தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கடந்த 22.4.2021 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து  மக்களுக்கு விநியோகிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்க நடைபெற்ற கூட்டத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை’ : ஸ்டெர்லைட்டின் மனுவிற்கு தமிழக அரசு பதில்

“இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை வெறும் ஆக்சிஜன் பயன்பாட்டிற்கு மட்டும் தற்காலிகமாக திறக்கப்பட வேண்டும் என்றும் ஆக்சிஜன் தயாரிப்பு தவிர வேறு எந்த செயலிலும் ஸ்டெர்லைட் ஆலை ஈடுபடக்கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்காக தற்காலிக உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.” என்று தமிழக அரசின் உத்தரவை அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஆக்சிஜன் தேவை என்ற நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தமிழக அரசு அதனை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்றும் அரசின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி செயல்பட்டது ஸ்டெர்லைட் ஆலை என்பதை கவனத்தில் கொண்டு மீண்டும் அந்த ஆலை ஆக்சிஜின் உற்பத்தி என்ற பெயரில் விதிமீறல்களில் ஈடுபட்டு விடும் என்ற அச்சம் நிலவுவதால் தமிழக அரசே தனது நேரடி கட்டுப்பாட்டில் ஆக்சிஜின் தயாரிப்பு பணி நடத்தப்பட வேண்டும் என்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை

“எனவே ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தேவையான பணியாளர்களை தமிழக அரசு தனது பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் அனுப்பி ஆக்ஸிஜனை உற்பத்திக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக தமிழக அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.” என்று அவர் கோரியுள்ளார்.

மேலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக திறந்து செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்