Aran Sei

கணவனிடமிருந்து பிரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் – காப்பகத்தில் இருந்து விடுதலை

த்தர பிரதேசத்தில், இஸ்லாமியரை திருமணம் செய்த இந்துப் பெண், கணவனிடமிருந்து பிரிக்கப்பட்டு காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவருடைய கணவர் லஜ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாதக் கர்ப்பிணியான அந்தப் பெண் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு இயற்றிய மதமாற்ற தடுப்புச் சட்டத்திற்குக் கடந்த மாதம் 27 ஆம் தேதி, அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் பலர் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கழித்து திருமணத்தைப் பதிவு செய்வதற்காகப் பதிவாளர் அலுவலகம் சென்ற தம்பதியை (ரஷித் மற்றும் பிங்கி) தடுத்த பஜ்ரங் தளத்தின் நிர்வாகிகள், அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. காவல் நிலைய வளாகத்திற்குள் 22 வயதான பிங்கி, பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்களால் மிரட்டப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த காணொலியில் “உன்னைப் போன்ற பெண்களுக்காகத்தான் லவ் ஜிகாத் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிங்கியிடம் கூறுவது பதிவாகியுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண் ”எனக்கு 22 வயது ஆகிறது. எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே கடந்த ஜுலை 24-ம் தேதி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குத் திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆகின்றன” என்று தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளதையும் அவர் கூறியுள்ளார்.

கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன் கீழ் ரஷித் மீதும் அவரது சகோதரர் மீதும் வழக்கு பதியப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ரஷித்தின் மனைவி பிங்கி, உத்தரப் பிரதேசக் காவல்துறையால் அரசு காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.

இந்த வழக்கு இன்று மாவட்ட நீதிபதி முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதியிடம் பிங்கி, தனது சொந்த விருப்பத்திலேயே ரஷித்தை திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் தன்னுடைய கணவர் வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். நீதிபதி அதற்கு ஒப்புதல் அளித்து அவரை விடுவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிங்கியிடம் திருமணம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ரஷீத் பிங்கியை மதம் மாற கட்டாயப்படுத்துவதாக அவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

இந்தக் குற்றச்சாட்டை மாவட்ட நீதிபதி முன்பு பிங்கி மறுத்துள்ளார். அவர் 1998 இல் பிறந்துள்ளதாகவும் சுயமாக முடிவெடுக்கும் வயது வந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் காவல்துறையால் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த மூன்று மாதக் கர்ப்பிணியான பிங்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதைக் காவல்துறையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் பரிசோதனைக்காக இரண்டு முறை மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவர் நன்றாகக் கவனிக்கப்பட்டதாகவும், கரு நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக பிங்கி கூறியுள்ளார் என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 7-வது வழக்கு – கூலித் தொழிலாளி கைது

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ரஷீத்தும் பிங்கியும் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற பிங்கியின் வாக்குமூலம் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிங்கியின் திருமணம் மற்றும் மதமாற்றம் குறித்து விசாரிக்கப்பட இருப்பதாகவும், பிங்கியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் வாக்குமூலம் பெற இருப்பதாகவும் மொரதாபாத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரபாகர் செளத்ரி கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்