Aran Sei

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

Image Credit : indianexpress.com

வேலன்டைன்ஸ் டே என்ற காதலர் தினத்தன்று, மத்திய பிரதேசத்தின் போபால் நகரில், “லவ் ஜிகாத்” என்ற பெயரில் தாக்குதல்களில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பாஜகவின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் அடங்குவார் என்று போபால் துணை காவல்துறை ஆணையர் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

“லவ் ஜிகாத்”-ஐ வளர்ப்பதாக குற்றம் சாட்டி, காவிக் கொடிகளை ஏந்தி ஒரு கும்பல், “ஜெய் ஶ்ரீராம்” என்ற முழக்கத்தோடு, ஹூக்கா பார் ஒன்றையும், உணவகம் ஒன்றையும் தாக்கியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள் தங்களை பாரதிய யுவ மோர்ச்சா, சிவ சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜகவின் இளைஞர் பிரிவு பாரதிய ஜன யுவ மோர்ச்சாவைச் சேர்ந்தவர்கள், ஞாயிற்றுக் கிழமை மதியம் 12.20 மணியளவில், போபாலின் ஷியாமா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜங்க்யார்ட் கஃபேக்குள் புகுந்து, நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ஹாக்கி மட்டைகளை ஏந்தி வந்த 8 பேர், கஃபேக்குள் புகுந்து, அங்கு வேலை செய்யும் ஊழியர்களை தாக்கியுள்ளனர், அதன் பிறகு கஃபேக்குள் இருந்த அறைக்கலன்களை உடைக்க ஆரம்பித்துள்ளனர்.

“நீங்கள் லவ்-ஜிகாத்-ஐ ஆதரிக்கிறீர்கள். இது டிரெய்லர் மட்டுமே! கஃபேக்குள் உங்களை மீண்டும் பார்த்தால், நாங்கள் உங்களை கொன்று விடுவோம்” என்று அவர்கள் மிரட்டியதாக, கஃபே மேலாளர் நரேந்திர குமார் போலீசுக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நடந்த அதே நேரத்தில், காவிக் கொடிகள் ஏந்திய 3 பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட கும்பல், பிட்டான் மார்க்கெட் அருகில் உள்ள கௌபாய் ரெஸ்ட்ரோ பாரில் புகுந்து, நாசவேலையில் ஈடுபட்டுள்ளது.

“நானும் உணவக ஊழியர்களும் அவர்களை தடுக்க முயன்ற போது, எங்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. உணவகத்தில் உள்ளே இருந்த அறைக்கலன்களை சேதப்படுத்திய பிறகு அவர்கள் போய் விட்டனர்” என்று இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ள ராகுல் யாதவ் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பலர், போபால் தென்மேற்கு தொகுதியைச் சேர்ந்த, பாஜகவின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சுரேந்திர நாத் சிங்குடன் தொடர்புடையதாக போலீஸ் கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்