Aran Sei

நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி

12 ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாத குற்றச்சாட்டு சாட்டப்பட்டு சில ஊடகங்களால் “பெப்ஸி பாம்பர்(Pepsy Bomber)” என்று முத்திரையிடப்பட்டு, 44 வயதான ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இறுதியாக அவர் சூரத் கீழமை நீதிமன்றத்தால் உபா உள்ளிட்ட அனைத்து சட்ட குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு  இந்த வாரம் வீடு திரும்பி உள்ளார்.

ஸ்ரீநகரின் ரெய்னாவாரி பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது பாபா, குஜராத் மாநிலத்திலிருந்து இளைஞர்களைத் தேர்வு செய்து,  பாகிஸ்தானுக்கு பயங்கரவாத பயிற்சிக்கு அனுப்ப, குஜராத் வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, பாபா தன்னை,  தான் வேலை செய்யும் நிறுவனம் கணினி மேலாண்மையில் பயிற்சி பெற குஜராத்திற்கு அனுப்பியதாகவும், தான் நிரபராதி என்றும் கடைசி வரை வாதிட்டார். தானும் தன்னுடன் பணியாற்றிய வேறு ஒருவரும் அகமதாபாத்தில் நடைபெறும் இரண்டு வார பயிற்சி வகுப்பிற்கு அனுப்பப்பட்டு, ஒரு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் ஏழாவது நாள் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப்படை இருவரையும் கைது செய்ததாகவும் கூறுகிறார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

தனது சக தொழிலாளி காஷ்மீரைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அவர் இறுதியில் விடுவிக்கப்பட்டு விட்டார். அப்போது 32 வயதில் இருந்த தன்னை அடுத்த இரு வாரங்களுக்கு விசாரணை செய்ததுடன், தான் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். ” என்னை விசாரிப்பவர்கள் எதைப் பற்றிப்  பேசுகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்தேன் என்று கூட அவர்கள் என்னிடம் கூறவில்லை என்பதுடன் நான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தொடர்ந்து கூறி வந்தனர்,” என்கிறார் பாபா. இரண்டு வாரங்களுக்குப் பிறகு கடைசியில் பயங்கரவாத எதிர்ப்புப்படை அவரது கைதுபற்றி வெளியிட்டது. சில வாரங்கள் காவல்துறை காவலில் இருந்த பாபாவை, நீதிமன்ற காவலின் கீழ் வதோதரா மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பினர்.

“நான் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. நான் நிரபராதி. என்னை ஒரு நாள் விடுதலை செய்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது இவ்வளவு நீண்ட நாளாக இருக்கும் எனத் தெரியவில்லை. எனினும் இதில் எனக்கு பெரிய வருத்தம் ஏதும் இல்லை. இது இறைவனிடமிருந்து வந்த சோதனை,” என்கிறார் பாபா.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

இளம்  இஸ்லாமியர்களையும், காஷ்மீரிகளையும் தவறாக கைது செய்து நீண்ட நாட்களாக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான கதைகளைத் தான் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறும் பாபா, தனது கதையும்  அந்தக் கதைகளில் ஒன்றாக  இருக்கும் என்று கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை என்று கூறுகிறார். சிறைக்கு வெளியே பயங்கரவாத எதிர்ப்புப்படை வட்டாரங்கள் மூலம் கிடைத்தத் தகவல்களின்படி பாபா வெடிகுண்டுகளை தயாரிப்பதில் வல்லுநர் என்பதால்தான் அவருக்கு ‘பெப்ஸி பாம்பர்’ என்று பட்டப்பெயர் வந்ததாக சில ஊடகங்கள் தெரிவித்தன. அத்துடன் அவை எந்த வித ஆதாரமும் இன்றி,  பாபா,  தான் குடிக்கும் குளிர்பான தகரக் குவளைகளை (Can) வெடிகுண்டு செய்யப் பயன்படுத்துவதாலேயே அத்தகைய பெயர் வந்தது என்றும், இந்த செயல்முறையால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் பெயர்பெற்ற நபர் என்றெல்லாம் கதைகளைக் கட்டி விட்டனர்.

பாபாவின் கைது “ஒரு மிகப்பெரிய வெற்றி” என அன்றைய ஒன்றிய அரசு செயலாளர்  ஜி.கே. பிள்ளை அப்போது அறிவித்தார். ” நாங்கள் குஜராத்தில்  இஸ்புல் முஜாஹூதீனின் இன்னொரு செயல் முறை வடிவத்தை கண்டுபிடித்திருக்கிறோம். எனவே இது நல்லது,” என்று அவர் கூறியதாக செய்திகள் வந்தன. தற்போது பாபா  பத்தாண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து  அவரிடம் கேட்ட போது, பயங்கரவாத சதி திட்டங்களுக்காக கைது செய்யப்படும்போது அரசு தரப்பு, தனிப்பட்டவர்களின் சரியான பங்குகுறித்து   பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். “என்ன நடக்கிறது என்றால், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் மீது மட்டும் அரசு தரப்பு கவனத்தைக் குவித்து, அந்த தனிநபரை முக்கிய சதிகாரராக குற்றம் சாட்டுகிறது.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர் இத்தகைய சதிவேலைகளில் ஈடுபட்டுள்ள குற்றவாளிக்கோ அல்லது நண்பனுக்கோ அவர்களுக்கே  தெரியாமல் உதவி செய்திருக்கலாம். இந்த தனிநபர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமலே இருக்கலாம். இதனால் அவர்களை உபா சட்டத்தின் கீழ் தண்டனைத் தருவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிபதி அவரை விடுதலை செய்யும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய வழக்குகளில் யார் ஆழமாக ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும், எத்தகைய நபர்கள் இரண்டாந்தர நபர்கள் என்பதையும் தெளிவாக அறிவதன் மூலம் இத்தகைய நபர்கள் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை வராமல் தடுக்கலாம்.

ஆனால் பாபாவுக்கு பிள்ளை அவர்களின் இந்த வார்த்தைகள் மிகவும் சிறியவை மற்றும் காலதாமதமானவை. அவர் இன்றும் கூட தனக்குப் போராளி குழுக்களுடனோ அல்லது தனிநபர்களுடனோ  எவ்விதத் தொடர்பும் இல்லை எனபதையும், பயிற்சி வகுப்பிற்காகவே குஜராத் சென்றதாகவும்  கூறி வருகிறார். ” எனது நிறுவனம்மூலம் நான் தங்க வேண்டிய விடுதி முகவரி தரப்பட்டது. தொடர் வண்டி நிலையத்தில் இறங்கியதும் அந்த முகவரியைக்  ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் காட்டினேன். அவர் என்னை அந்த இடத்தில் இறங்கி விட்டார். ஆறு நாட்கள் கழித்து பயங்கரவாத எதிர்ப்புச் படையினர் என் அறையின் கதவைத் தட்டினர்,” என்று கூறுகிறார் பாபா. ” எனது குற்றம் பற்றிக்கூட எனக்குத் தெரியாது. பல வாரங்கள் கழித்துத்தான் என்மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும், அல்லது எனது பட்டப்பெயர் பற்றியும் தெரியவந்தது. இது மிகவும் மனவேதனைக்குரியது,” என்கிறார் பாபா.

வாழப்பாடி முருகேசன் படுகொலை; தொடரும் காவல்துறை அத்துமீறல்கள் – அ.மார்க்ஸ்

சிறையில் நேரத்தைக் கழிப்பது

பாபா ஊடகங்களின் செய்திகளும், குற்றச்சாட்டுக்களும் தன்னை  சுமையாக அழுத்திவிடக் கூடாது என முடிவு செய்தார். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். ” நேரத்தை எப்படி செலவிடுவது என எனக்குத் தெரியவில்லை. இது எனக்கு ஒரு புது வாழ்க்கை. பிரார்த்தனை மற்றும் உடற்பயிற்சி செய்தேன் எனினும் நிறைய நேரம் இருந்தது. எனவே படிக்க ஆரம்பித்தேன். சிறை அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்து,  நான் முதுகலைப் பட்டம் பெற உதவினர். இறுதியில் நான் மூன்று முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். அரசியல் அறிவியலில் ஒன்று, பொது நிர்வாகத்தில் ஒன்று, மற்றொன்று அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் ஒன்று,” என்கிறார் பாபா.

கைது செய்யப்படுவதற்கு முன் பாபா தனது ஆர்வத்தால் கணினி தொழில்நுட்பத்தில் ஒரு பட்டயப் படிப்பும் முடித்திருந்தார். உண்மையில், அவர் வேலை தேடும் இளைஞர்களை  பயிற்றுவிக்க ஒரு சிறிய கணினி மையத்தையும் நிறுவி இருந்தார்.  இந்தியாவில் குழந்தைகள் உடல்நலம் குறித்து வேலை செய்து வந்த ஒரு அரசு சாரா ஜெர்மானிய நிறுவனத்தில் சேர்ந்தார். இது அவர் கைது செய்யப்படும் போது நடந்தது.

அடுத்த பல ஆண்டுகள் பாபாவின் குடும்பத்தினர் துணிச்சலுடன் நீதிமன்றத்தில் போராடினர். ஆனால் அவர்களுடைய மூத்த மகனின் விசாரணைக்காக, பணரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. அந்த குடும்பம் துவக்க நாட்களில் பிணை மனுக்களைப் போட்டனர். ஆனால் அவைகள் நிராகரிக்கப்பட்டுவிட்டதால், பிறகு அச்சம் அவர்களை வேறு வழியில் செல்ல வைத்தது. அவர்களது வழக்கறிஞர் மீண்டும் மீண்டும் பிணை மனு போடுவதற்கு பதிலாக பாபா மீது போடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு ஆலோசனைக் கூறினார். இருப்பினும் 2016 ல் அவருடையத் தந்தைக்கு  புற்றுநோய் இருப்பதை அறிந்த போது பிணைக்கு மனு அளித்தனர்.

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

பாபா மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்களின் தீவிரத் தன்மையால், அந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது. ” நானும் எனது தந்தையும் குஜராத் செல்வோம். நீதிமன்ற வழக்கு ஒருவகையில்  பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும், குறைந்தது நாங்கள் இருவர் இருந்தோம். இருப்பினும் அவருக்குப் பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட போது  குடும்பத்தின் மீது பெரிய அடி விழுந்தது. அவர் 2017 ல் காலமானார்,” என்கிறார் பாபாவின் இளைய சகோதரர் நாசிர் அகமது. கோவிட்19 தொற்றை ஒட்டி சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக பேச்சு அடிபட்ட போது, பாபாவின் பிணை விடுதலைக்கும் முயன்றதாக அவர் மேலும் கூறினார். “நாங்கள்  ஸ்ரீநகரில் உள்ள மாவட்ட ஆணையாளரிடம் அனைத்து ஆவணங்களையும் கொடுத்தோம். ஆனால் எங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை,” என்கிறார் அவர்.

அகமது  ஸ்ரீநகரில் ஒரு விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். அத்துடன் பாபாவின் வழக்குக்காகவும் நேரத்தை ஒதுக்கி வருகிறார். தந்தைக்குப் பிறகு குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பையும் அவர் சுமந்து  வருகிறார். அதே நேரம் அகமது தனது இரண்டு சகோதரிகளின் திருமணத்தையும் நடத்தி முடித்திருக்கிறார். “சில சமயங்களில் இதே வழியில் செல்ல முடியாதோ என்று நினைத்தது உண்டு. ஆனால் இறைவன் எனக்கு வலிமையைக் கொடுத்தார்,” என்கிறார் அகமது.

நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?

தங்கள் மூத்த சகோதரனை விடுதலை செய்வதற்கு தங்கள் வழக்கறிஞர் ஜாவித் கானின் பங்கை இந்த சகோதரர்கள் அங்கீகரிக்கிறார்கள். கான் தனது விடுதலைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து விட்டதாக பாபா கூறுகிறார்.

12 ஆண்டுகளுக்கு முன் பார்த்த தனது மூத்த மகனை மீண்டும் தன் வீட்டில் பார்ப்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்கிறார் அவரது தாய்.  “நான் அவனை 2014 ல் ஒரு முறை சென்று பார்த்தேன். அவனை வைத்திருந்த இடத்தை நான் பார்த்தபோது அங்கு அவன் உயிர் வாழ முடியுமா என்ற ஒரே ஒரு எண்ணம்தான் எனக்கு இருந்தது. அவன் வாழ்ந்து விட்டான். நான் இறைவனிடம் என் மகனைத் என்னிடம் திருப்பித் தருமாறு வேண்டினேன். இறுதியாக எனது வேண்டுதல் நிறைவேறி விட்டது,” என்கிறார் பஷீர் அகமது பாபா.

தி வயர் இதழில் ஆசான் ஜாவேத் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்