Aran Sei

அம்பானிக்கு 10,000 கோடி கடன் தள்ளுபடி? – திவால் சட்டத்தின்படி கடன் தள்ளுபடி பெற முயற்சி

Credits : Business Standard

கடந்த 1997 ஆம் ஆண்டு, எஸ்கேஐஎல் இன்ஃப்ராஸ்டரக்சர் எனும் கட்டுமான நிறுவனம் குஜராத்தின் கடலோர பகுதியில் பிபாவாவ் ஷிப்யார்ட் எனும் கப்பல்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியது.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் உட்பட பல்வேறு நிதி நிறுவனங்களில் இருந்து நிதியுதவியை பெற்றும், கடும் நெருக்கடியைச் சந்தித்த இந்நிறுவனம் 2005 ஆம் ஆண்டு, எஸ்கேஐஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திமிடருந்து கைவிடப்பட்டு, பிபாவாவ் ஷிப்யார்ட் லிமிடட் என பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு தனியார் வங்கிகளிடம் இருந்தும் பிபாவாவ் ஷிப்யார்ட் கடன் பெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு பொது நிறுவனமாக மாறிய பிபாவாவின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் விற்பனைக்கு வந்தன.

இந்திய கடற்படைக்கு போர் கப்பல்களை உருவாக்கி தருவதற்கான ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் பிபாவாவ் ஷிப்யார்ட் ஆகும். ஒரு ஆண்டுக்கு ஐந்து கப்பல்கள் தயாரித்து தர வேண்டும் எனும் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தில் கூறப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, பிபாவாவ் ஷிப்யார்டின் 17.66% பங்குகளை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடட் நிறுவனம் வாங்கியது. மேலும், கூடுதல் பங்குகளை வாங்க திட்டமிட்ட ரிலையன்ஸ் நிறுவனம், அதை தொடர்ந்து 25.1% பங்குகளையும், பின்னர் 36.5% பங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இந்நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி நியமிக்கப்பட்டார். இந்நிறுவனம் ரிலையன்ஸ் நேவல் அண்ட் இஞ்சியனிரிங் லிமிடட் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நேவல் இஞ்சினியரிங் லிமிடட் நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2020 ஆம் தொடங்கி, ரிலையன்ஸ் நேவல் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்ததாகவும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கியிடம் ஏறக்குறைய 12,400 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் புலும்பெர்க் குவிண்ட் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், திவால் சட்டத்தின் வழியாக இந்த நிறுவனம் விற்பனைக்கு வந்துள்ளது.  இந்த நிறுவனத்தை வாங்குவதற்காக ஹேசல் மெர்க்கண்டைல் லிமிடட், நவீன் ஜிந்தால் குரூப் மற்றும் ஜிஎம்எஸ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

12,400 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள ரிலையன்ஸ் நேவல் நிறுவனத்தை, முதல் தவனையாக 700 கோடி ரூபாயும், மொத்தமாக 2000 கோடி ரூபாயும் கொடுத்து வாங்கிக் கொள்வதாக ஹேசல் மெர்க்கண்டைல் நிறுவனம் முன்மொழிந்துள்ளது. நவீன் ஜிந்தால் குழுமம் 400 கோடி ரூபாயும், ஜிஎம்எல் நிறுவனம் 200 கோடி ரூபாயும் கொடுத்து நிறுவனத்தை வாங்கிக் கொள்வதாக முன்மொழிந்துள்ளனர். இதன் மூலம் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ஏறக்குறைய 10,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படப்போவது உறுதியாகியுள்ளது.

SOURCES : BLOOMBERG QUINT, ECONOMIC TIMES, MONEYCONTROL, THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்