”திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, தனி மனித மற்றும் பொது ஒழுக்கத்தின் படி ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று அல்ல” என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த குர்விந்தர் சிங் மற்றும் குல்சா குமாரி ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததால், இவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி தன்தரன் மாவட்டத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்தச் சூழலில், இவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியான உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “திருமணத்தைப் பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள் அனைத்தும் பெண்ணினுடைய வீட்டில் சிக்கிக் கொண்டுள்ளது. நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். பெண்ணினுடைய பெற்றோர்களால் எங்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே பாதுகாப்பு தாருங்கள்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி ஹெச்.எஸ்.மதன் தலைமையிலான அமர்வால் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,” மனுவின் சாரம், திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு (Live In Relationship) ஒப்புதல் கோருவது போல உள்ளது. இது தனி மனித மற்றும் பொது ஒழுக்கத்தின் படி ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எனவே மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. இவர்கள் மனு நிராகரிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளதாக என்டிடிவி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.