Aran Sei

2020 ஆம் ஆண்டிற்கான விளக்கு விருது – கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தேர்வு

2020-ம் ஆண்டுக்கான ‘விளக்கு விருது’கள், கவிஞர் சுகிர்தராணிக்கும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினால் இந்த விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நினைவாக இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக இந்த விருது வழங்கப்டுகிறது. பிரமிள், சி.சு.செல்லப்பா, பூமணி, ஞானக்கூத்தன், அம்பை, ராஜ்கௌதமன், பாவண்ணன், ஆ.சிவசுப்பிரமணியன், எம். ஏ. நுஃமான்  போன்ற தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சுகிர்தராணி

சாதிக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதியும் செயல்பட்டு வருபவர். பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர். தலித் பெண்ணிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். பெண்களுக்கான இயங்குவெளி என்பது சமூகத்தாலும் ஆண்களாலும் வரையறுத்து வைக்கப்பட்டிருப்பதையும், பெண்களின் உடல் என்பது ஆண்களின் அடக்குமுறைக்கும், பாலியல் அதிகாரத்திற்கும் களமாக இருப்பதையும் தன் படைப்புகள்மூலம் கேள்விக்குட்படுத்தி வருபவர்.

இவரின் நூல்கள் : கைப்பற்றி என் கனவு கேள். இரவு மிருகம், அவளை மொழிபெயர்த்தல், 6. இப்படிக்கு ஏவாள்  உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.

ஸ்டாலின் ராஜாங்கம்

புத்தாயிரத்தின்(2000) தொடக்கத்திலிருந்து எழுதி வரும் ஸ்டாலின் ராஜாங்கம், தமிழியல் ஆய்வில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளார்.  தலித் வரலாறு, தலித் பண்பாடு, தமிழ் ஆய்வுகள், அயோத்திதாசர் ஆய்வுகள், சினிமா திறனாய்வியல் உள்ளிட்ட களங்களில் தன்னுடைய ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.  விமர்சனம், ஆய்வு ஆகிய மிக முக்கியமான துறைகளில் இளைஞர்களின் பங்கு ஒரு சிறிதும் இல்லாத காலத்தில் ஒரு அபூர்வமான, துடிப்பான இளம் ஆய்வளராக உள்ளார் ஸ்டாலின் ராஜாங்கம். குடும்பத்தில் அம்பேத்கர், திராவிட இயக்கம் என்கிற அறிமுகத்தை பெற்றிருந்தாலும்  கல்லூரி நாட்களில் இடதுசாரி அமைப்புகளிடம் நெருக்கம் கொண்டிருந்தார். தொண்ணூறுகளில் கிளைபரப்பி இருந்த தலித் இலக்கியம், தலித் திறனாய்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கினார். அவருடைய முதல் நூலான ”சனநாயகமற்ற சனநாயகம்” (ஜனவரி 2007) நூலில் இடம்பெற்றுள்ள அவரைப் பற்றிய அறிமுகக் குறிப்பில் 1990களில் உருவான தலித் எழுச்சியின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 13 மிக முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவரின் நூல்கள் : எதார்த்த பெளத்தம்,  (அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் (வெளிவராத விவாதங்கள் அயோத்திதாசர், பெயரழிந்த வரலாறு, ஆணவக் கொலைகளின் காலம், எழுதாக் கிளவி ,  வாழும் பௌத்தம், தமிழ் சினிமா, வைத்தியர் அயோதிதாசர் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்