Aran Sei

பாசிச சக்திகளின் பிடியிலிருந்து குடியரசைக் காப்பாற்ற ஒன்றுபடுவோம் – – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் குடியரசு தின வாழ்த்துச் செய்தி

பாசிச சக்திகளின் பிடியிலிருந்து குடியரசைக் காப்பாற்ற ஒன்றுபடுவோம் என்று எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் தமிழ்நாடும் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் குடியரசு தின வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல தியாகங்களும், துயரங்களும் நிறைந்த 200 ஆண்டுகால நெடிய சுதந்திர போராட்டத்தின் பலனாக கிடைத்த சுதந்திரத்திற்கு பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த நாளை குடியரசு தினமாக நாம் கொண்டாடி வருகின்றோம். அதன்படி நாட்டின் சுதந்திர தின பவளவிழா ஆண்டில், ஜனவரி 26 ல் இந்திய தேசத்தின் 73வது குடியரசு தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நம் இந்திய தேசத்தின் பெருமைகளாக கூறிக்கொள்ள பல விஷயங்கள் இருந்தாலும், நமது தேசத்தின் பன்முகத் தன்மை ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது. நமது தேசத்தில் நிலவிவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒருமைப்பாட்டு உணர்வானது உலகிற்கே முன்னுதாரணமாக உள்ளது. ஆனால், நாட்டின் அடிப்படை உறுதிப்பாடான பன்முகத்தன்மை மற்றும் தனிமனித உரிமைகளில் இருந்து ஆளும் பாஜக அரசு தன்னைத் தூர விலக்கியுள்ளது. அதன் பாரபட்சமான நடவடிக்கைகளால் தேசத்தின் பன்முகத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளை ஆளும் ஒன்றிய பாஜக அரசு காலில் போட்டு மிதித்து வருகிறது. அதை திட்டமிட்டு சிதைக்க பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி, மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நசுக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.

அரசை எதிர்ப்பவர்கள் அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள். மட்டுமல்லாது தேசத்துரோகம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டி சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அரசியலமைப்பின் முகப்புரையில் இருந்து ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோசலிஸ்ட்’ போன்ற வார்த்தைகளை நீக்க தீவிர முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இது‘இந்து ராஷ்டிரா’ என்று அறிவிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் முன்மொழிவு என்பது, நாடாளுமன்ற அமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, எதிர்க்கட்சிகள் நடமாடுவதற்கு இடமளிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் சதியாகும்.

நாட்டில் பாசிச குண்டர்களால், கும்பல் தாக்குதல் படுகொலைகள், முஸ்லிம்களின் சொத்துக்கள் வாழ்விடங்களை அழித்தல், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் பரவி வருகின்றன. பாஜக ஆளும் பல மாநில அரசுகளால் இயற்றப்பட்ட ‘மதமாற்ற எதிர்ப்பு’ சட்டங்கள், அடிப்படை உரிமைகளை திட்டவட்டமாக மறுப்பதற்கு மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் பயன்படும் ஒரு கருவியாகவும் உள்ளன. விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் சட்ட மசோதாக்கள், விவாதம் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன.

‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் மக்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உளவு பார்க்கத் தயங்காத அளவுக்கு பாஜக அரசு மிகவும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மாநிலங்களின் சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால் கூட்டாட்சி அமைப்பு தீவிர அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறது. போலியாக கட்டமைக்கப்பட்டு வரும் வளர்ச்சி கோஷங்களும், வெறியூட்டப்பட்ட தேசியவாதமும் நம் பெருமைமிகு குடியரசு இந்தியாவை சீரழித்துக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, இந்திய மக்களாகிய நாம், நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும், அதன் அரசியலமைப்பையும் பாதுகாக்க இந்த குடியரசு தின நாளில் உறுதியேற்போம். நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துத் தந்த தேசத்தின் உண்மையான மக்களாட்சி ஜனநாயகத்தை பாசிச சக்திகளிடமிருந்து பாதுகாப்பது தேச மக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்ற எதேச்சதிகார மற்றும் மதவாத சக்திகளின் துரோக மற்றும் தீய செயல்திட்டங்களை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் தமிழ்நாடும் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்