உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில், சிறுபாண்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டிய சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்தும், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
இது தொடர்பாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியுள்ள மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், “வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. உடனே கைது செய்ய முடியாது. சட்டரீதியிலான நடைமுறைகள் பின்பற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுபோன்ற வழக்குகளில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சியாளரான டாக்டர் கார்த்திகே ஹரி குப்தா, “ஐபிசியின் 153ஏ பிரிவு சேர்க்கப்பட்டுள்ள வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யலாம். ஆனால் காவல்துறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதைத்தொடர்ந்து, காவல்துறை அதிகாரி திருப்தி அடையவில்லை என்றால், பல காரணங்களுக்காக கைது செய்யலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹரித்வாரரில் நடந்த தர்ம சன்சத் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபாண்மையினருக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பேசிய காணொளிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, உத்தரகண்ட் மாநில காவல்துறை டிசம்பர் 23 அன்று, ஐபிசியின் 153ஏ(பகைமையை ஊக்குவித்தல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அவதார் சிங் ராவத், “இந்த விவகாரத்தில் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடலாம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. சட்டம் கைது நடவடிக்கையை சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
‘வன்முறை பேச்சுகள் இனப்படுகொலையின் முன்னோட்டம்’- ராஜஸ்தான் முதலமைச்சர் எச்சரிக்கை
இதற்கிடையில், தான் கூறியதை மறுக்க மாட்டேன் என்று தர்ம சன்சத் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் யதி நரசிங்கானந்தா கூறியுள்ளார்.
“சன்சாத்தில் நான் பேசியதை நான் மறுக்க மாட்டேன். அதுதான் இந்த காலத்தின் உண்மை. கடந்த காலங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் இம்முறை தேர்தல் வரவிருப்பதால், துறவிகளை அவதூறு செய்கிறார்கள்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.