Aran Sei

விவசாயிகள் அறிவித்த ‘பாரத் பந்த்’: போராட்டத்தை ஆதரித்து இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பபெற வலியுறுத்தி செப்டம்பர் 27 அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு இடது சாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தமிழ்நாடு பிரிவுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்த மசோதாவை எதிர்த்தும் தலைநகர் புதுதில்லியில் 11 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

“போராட்ட களத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் விவசாயிகளுக்கு விரோதமான இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோல் கேரளம், புதுச்சேரி சட்டப் பேரவையிலும் இது போன்ற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போராடுபவர்கள் விவசாயிகளே அல்ல; பாகிஸ்தான் ஆதரவாளர்கள்’ – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அக்ஷய்வர் லால் கோண்ட்

இவைகளை உதாசீனப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) சார்பில் செப்டம்பர் 27-ந் தேதி அகில இந்திய பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஆகிய இடது சாரி கட்சிகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்வதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இப்போராட்டத்தில் இடதுசாரி கட்சி தோழர்கள் தமிழகம் முழுவதும் அதிகமான மக்களை திரட்டி சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பந்த் போராட்டத்தை விளக்கி மக்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டிய மழை நீரால் மூழ்கிய போராட்டக் களங்கள் – விடாது போராடும் விவசாயிகள்

மேலும், “இந்திய விவசாயிகளை வஞ்சித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்குச் சிவப்புக்கம்பளம் விரித்து வரும் ஒன்றிய பாஜக அரசினை கண்டித்து நடைபெறும் இந்த அகில இந்திய பந்த் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் இப்போராட்டத்திற்கு பேராதரவு அளிக்க வேண்டும்.” என்று தங்களது கூட்டு அறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சிகள் தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்