Aran Sei

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு – ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருக்கு எதிராக சிறப்புரிமைத் தீர்மானத்தைக் கோரும் காங்கிரஸ்

பெகசிஸ் ஸ்பைவேர் தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுப்பிடித்துள்ள நிலையில், இன்று(ஜனவரி 31) தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இப்பிரச்சனையை விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, 2017 இல் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் பெகசிஸ் ஸ்பைவேர் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்க கையெழுத்தாகியுள்ளது. இதன் மதிப்பு ஏறத்தாழ 2 கோடி பில்லியன் டாலர் ஆகும்.

இந்நிலையில், நேற்று(ஜனவரி 30), மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “பெகசிஸ் விவகாரத்தில் மக்களவையை தவறாக வழிநடத்திய ஒன்றிய  தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவுக்கு எதிராக சிறப்புரிமைத் தீர்மானம் நிறைபேற்ற வேண்டும்” என்று கோரியுள்ளார்.

பெகசிஸ் விவகாரம்: ஜனநாயக அமைப்புகளை உளவு பார்க்கும் மோடி அரசு; இது தேசத்துரோகம் – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

இது தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதிய கடிதத்தில், 2017 இல் இந்தியா பெகசிஸ் ஸ்பைவேரை வாங்கியதாகக் கூறும் நியூயார்க் டைம்ஸின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால், பெகசிஸ் ஸ்பைவேருக்கும் ஒன்றிய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னா மக்களவையில் முன்னர் தெரிவித்திருந்தார்.

“மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தியதோடு, இந்திய மக்களிடம் பொய் சொல்லியது போல் தோன்றுகிறது” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

‘பெகசிஸ் உளவு செயலியை வாங்கிய இந்திய அரசு’ – விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மேலும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெகசிஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில், ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பெகசிஸ் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுமீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒன்றிய அரசு மறுத்துள்ளது என்று அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தாண்டு நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது, பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை இரு அவைகளிலும் விவாதிக்கக் கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, இரு அவைகளையும் செயல்பட அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில், பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பரப்புரைகளுக்கு இடையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – விவசாயிகள், எல்லைப் பிரச்சினை, பெகசிஸ் குறித்து பேச காங்கிரஸ் திட்டம்

பெகசிஸ் விவகாரத்தோடு, விவசாயிகள் பிரச்சனை, சீன ஊடுருவல்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்டது, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமன விதிகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் போன்றவையும் இந்த கூட்டத்தொடரில் எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் இப்பிரச்சனைகளை இந்த கூட்டத்தொடரில் எழுப்ப முடிவு செய்துள்ளன.

Source: New Indian Express

பெகசிஸ் செயலி குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள அரண்செய் சிறப்பிதழை (உளவுக்குதிரை) படிக்கவும். இணைப்பு கீழே.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்