Aran Sei

லதா ரஜினிகாந்தை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம் : ஆஸ்ரம் பள்ளி வாடகை பிரச்சனை

ஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் காலி செய்ய தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என அதன் உரிமையாளர் லதா ரஜினிகாந்த்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாரான லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளி வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இடத்தின் உரிமையாளர்களுக்கும் லதா ரஜினிகாந்திற்கும் இடையே வாடகை பிரச்சனை இருந்து வருகிறது.

`நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா’ – ரஜினிக்கு நீதிபதி கண்டனம்

இந்நிலையில் 2013-ம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கியான ரூபாய் 1 கோடியே 99 லட்சத்தை செலுத்தக்கோரி இட உரிமையாளர்கள் கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி இடத்தின் உரிமையாளர்கள், ஆஸ்ரம் பள்ளியின் கதவை (Gate) பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி திறக்கப்பட்டு ஆஸ்ரம் பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

உடல்நலப் பிரச்சனையால் கட்சி தொடங்குவது தடைபடுகிறதா? : ரஜினிகாந்த்

அதன் பின்னரும் வாடகை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் ஒப்புக்கொண்டது.

ரஜினிகாந்த் திருமணமண்டபம் 250 சதுர அடிதானா? – மீண்டும் சர்ச்சை

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி இடத்தை காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருட காலம் அவகாசத்தை நீட்டிக்க கோரி ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி என். சதீஷ்குமார் விசாரித்து வருகிறார்.

90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன கிடைக்கும்

கடந்த டிசம்பர் 14-ம் தேதியன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாயை முறையாக செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனவே இடத்தை காலி செய்ய வேண்டிய கால அவகாசத்தை இந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

விளக்கம் தருவாயோ வதந்தியே?

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிண்டியில் இயங்கி வரும் ஆஸ்ரம் பள்ளி கட்டிடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராககவேந்திரா கல்விச் சங்கத்திற்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்விச் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்