தன்பாலின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்காமல் இருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ஜப்பான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில், திருமணம் என்பது இரு பாலினத்தரிடையே ஒரு மனதாக எடுக்கும் உடன்படிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தன்பாலின சேர்க்கையாளர்கள், அவர்களுடைய இணையர் வைத்திருக்கும் சொத்துக்களுக்கும், அவர்களுடைய இணையரின் குழந்தைகளுக்கும் உரிமை கோர முடியாது.
தன்பாலின சேர்க்கையாளர்களை அங்கீகரித்து சில நகராட்சிகள் சான்றிதழ்களையும், தங்குவதற்கான வீடுகளையும், மருத்து வசதிகளுக்கான சலுகைகளையும் அளிக்கிறது. ஆனால் ஆண்-பெண் தம்பதியருக்கு கிடைக்கும் முழு சட்ட ரீதியான அங்கீகாரமும் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு ஜப்பானில் வழங்கப்படுவதில்லை.
தன்பாலினத்தவர் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வழங்க இயலாது – வாடிகன் தேவாலயம்
இந்நிலையில், ஜப்பான் நாட்டின், சப்போரோ மாவட்ட நீதிமன்றத்தில், தன்பாலின சேர்க்கையாளர்கள் ஆறு பேர் (மூன்று தம்பதியினர்) ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தன்பாலின சேர்க்கையாளராக இருப்பதால் திருமணம் செய்ய முடியாமல் தவித்ததாகவும், மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஜப்பான் அரசாங்கம் சுமார் 6 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவு மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தன்பாலின சேர்க்கையாளர்களை திருமணம் செய்ய அனுமதிக்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உத்தரவிட்டுள்ளார். மனுதாரர்களின் நஷ்ட ஈடு கோரிக்கை நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இந்த உத்தரவை மனுதாரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். இந்தத் தீர்ப்பு ஒரு நல்ல முன்மாதிரியாக அமையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
SOURCE : REUTERS
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.