Aran Sei

எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை தொடரும் – உச்ச நீதிமன்றம்

Image Credits: The Hindu

சென்னை-சேலம் இடையிலான எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை-சேலம் இடையே பலஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டு வழி சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காகக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இத்திட்டத்திற்கு நில உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள், விவசாயிகள் போன்ற பலரிடம் இருந்தும் எதிர்ப்பு எழுந்துந்ததைத் தொடர்ந்து, எட்டு வழி சாலைக்குத் தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், மாநிலங்கள் அவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

2020-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளில் தீர்ப்பு அளித்தது. எட்டு வழி சாலையை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அதற்காகக் கையக படுத்திய நிலங்களை எட்டு வார அவகாசத்துக்குள் திருப்பி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் முன்னெச்சரிக்கை மனு (caveat petition) தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எதிர்மனுதாரர்களின் வாதங்களை எழுத்துப் பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது. அதற்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று நீதிபதிகள் ஏ எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை தொடரும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்