லட்சத்தீவுகளின் நிர்வாகியின் புதிய உத்தரவுகளான பால் பண்ணைகளை மூடுதல், பள்ளிகளின் மதிய உணவுகளில் இறைச்சிகளை நீக்குதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரவுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தீவுகளின் சட்ட வரம்பைக் கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
லட்சத்தீவுகளை சேர்ந்த வழக்கறிஞர் அஜ்மல் அகமது தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ். மணிகுமார் மற்றும் நீதிபதி ஷாஜி பி.சாலி அடங்கிய அமர்வு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
பசு, காளை மற்றும் கன்றுகள் கொல்லப்படுவதை தடை செய்யும், விலங்கு பாதுகாப்பு (ஒழுங்குமுறை) 2021 முன்மொழிவின் கீழ் பால் பண்ணைகளை உடனடியாக மூடுமாறும் நிர்வாகி பிரபுல் கே படேல் உத்தரவிட்டார்.
மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பொருட்களை விற்பது மற்றும் வாங்குவதை தடை செய்வதற்காக பண்ணைகளை மூடுவதன் மூலம், தீவுகளின் பால் ஆதாரத்தைக் குறைத்து, குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்கு தீவு மக்கள் நிர்பந்திக்கப்படுவதாக அஜ்மல் அகமது தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
”இது தீவு மக்களின் உணவுப் பழக்கங்களைத் தேர்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதைத் தவிர வேறொன்றுமில்லை. இது அரசியலமைப்பின் கிழ் பொதிந்துள்ள உரிமைக்கு எதிரானது” என அகமது தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தில் இருந்து கோழி உள்ள இறைச்சிகளை நீக்கியதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.