காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை உள்ளடக்கிய காங்கிரஸ் தலைவர்களின் குழு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, லக்கிம்பூர் கெரி வன்முறை குறித்த உண்மைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடியரசுத் தலைவரைச் சந்திக்க விரும்பும் ஏழு பேர் கொண்ட குழுவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜுன் கார்கே, குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால் மற்றும் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர்.
இக்குழுவானது, நாளை(அக்டோபர் 13), காலை 11.30 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போது, லக்கிம்பூர் கேரி சம்பவம் குறித்த உண்மை தகவல்கள் அடங்கிய அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
முன்னதாக, இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு அக்கட்சி கடிதம் எழுதியிருந்தது. அதில், உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் பட்டப்பகலில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.
மேலும், “ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது கண்டனத்திற்குரியது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமான ஜீப்பின் கீழ் விவசாயிகள் நசுக்கப்பட்டு இறந்தது துயர் மிகுந்தது. அஜய் மிஸ்ராவின் மகன்தான் அக்காரை ஓட்டி வந்ததாக, நேரில் கண்ட சாட்சிகளாக விவசாயிகள் இருக்கிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.