Aran Sei

லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு போதுமான வசதி இல்லை – பாஜக முன்னாள் எம்பி

டாக்கில் உள்ள பாங்ஆங் சோ ஏரியின் வடக்கே இரண்டு முக்கியமான பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக பாஜகவை சேர்ந்த, லடாக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துப்ஸ்டான் சிவாங் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே வாழும் மக்கள், அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் கூடரங்களில் தங்கியிருந்ததாகவும், அது குளிரைத் தாங்க போதுமானதாக இருக்கவில்லை என்றும் தன்னிடம் தெரிவித்ததாக துப்ஸ்டான் கூறியுள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களாக கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா, சீனா இடையில் மோதல் நிலவி வருகிறது.

“எல்லையில் நிலைமை மோசமாக உள்ளது. சீன ராணுவம் எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்ததுடன் பாங்ஆங் சோ ஏரியின் வெந்நீர் ஊற்று உட்பட மிக முக்கியமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் முழுமையாக அங்கிருந்து வெளியேறவில்லை. இதைத்தான் அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர்” என்று துப்ஸ்டான் சிவாங் தி இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

“நமது ராணுவ வீரர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் சீனாவை பணியவைக்க முடியவில்லை என்றால், ராணுவ வீரர்களுக்கு சரியான தங்கும் வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும்” என்று துப்ஸ்டான் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் துப்ஸ்டான் தலைமையில் லடாக்கை சேர்ந்த பிரதிநிதிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாகவும், அதில், லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியல் சாசனத்தின் 6-வது பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் தி இந்து கூறுகின்றது. அப்போது, லடாக்கில் நிலம் தொடர்பான சட்டத்தில் எந்த ஒரு மாற்றம் கொண்டு வருவதாக இருந்தாலும், தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்ததாக துப்ஸ்டான் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், வெளி ஆட்கள் நிலம் வாங்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.

“ஜம்மு காஷ்மீரின் நில உரிமை தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு லடாக்கில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதும், அமித் ஷா அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், லடாக்கிற்கு அதுபோன்ற அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிடாது என்று நம்புகிறோம். 6-வது பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறோம்” என்று துப்ஸ்டான் கூறியுள்ளார்.

ஆறாவது பட்டியல், பழங்குடியினரை பாதுகாப்பதுடன், தன்னாட்சி கவுன்சில்கள் உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குகிறது. அந்த கவுன்சில்கள் நிலம், பொது சுகாதாரம், விவசாயம் உட்பட சில விஷயங்களில் சட்டம் இயற்றிக்கொள்ளலாம். அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோராம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற 10 கவுன்சில்கள் உள்ளன.

சமீபத்தில் லடாக்கின் தலைமையிடமான லே-யில் நடைபெற்ற தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் பாஜக குறைந்த வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இது குறித்து துப்ஸ்டான் கூறுகையில் “தற்போது எங்களுக்கு பலமான எதிர்க்கட்சி உள்ளது. அவர்கள் தேசியவாதிகளை ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைப்பு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

லே மற்றும் கார்கில் மாவட்டங்களை சேர்ந்த லடாக்கின் பிரதிநிதிகளுடன், தன்னாட்சி கவுன்சில் தேர்தல் முடிவுற்றவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

நடந்து முடிந்த தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் பாஜக 15 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. 2015-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற இடங்களை விட  இந்தமுறை பாஜக 2 இடங்கள் குறைவாக பெற்றுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்