Aran Sei

மாவோயிஸ்டுகளை அழித்ததே திமுக, காங்கிரஸ் கூட்டணி தான் – பாஜக தலைவர் எல்.முருகன்

credits : the new indian express

ராஷ்ட்ரிய சுய சேவக சங்கத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) எதிர்ப்பினால் முதுகலை ஆங்கில மாணவர்களுக்கு  பாடமாக இருந்த எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகமான ‘தோழர்களோடு ஒரு பயணம்’ (Walking with the Comrades)  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ”ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கல்வித்துறையா அல்லது காவித்துறையா? நெல்லை வரை தங்களது அடாவடியை நீட்டியுள்ள பாஜக ஆர்எஸ்எஸ் என கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

திமுகவின் அமைப்புச் செயலாளர்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ”அருந்ததி ராய் பாடத்தை நீக்கியதுபோல் வரலாற்று தலைவர், திருவள்ளுவர் பெயரையும் நீக்குவார்கள்” என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்தும் திமுக தலைவர்களின் கண்டனம் குறித்தும் பாஜக தலைவர்எல்.முருகன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”தீவிரவாதத்தை திமுக ஆதரிக்கிறதா” என கேள்வியெழுப்பியுள்ளார்.

“அருந்ததி ராய் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஆயுத போராட்டம் என்பது 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நடைபெற்றது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்தது. அப்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திமுக இப்போது எதிர்ப்பதேன்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

”மேலும் அந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையிலேயே இந்திய துணை ராணுவப்படைகள் மத்திய இந்திய பகுதிகளில் அந்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு எதிரான ஆப்ரேஷனை செய்தனர். உண்மையான அக்கரை இருந்திருந்தால் திமுக அப்போதே தடுத்திருக்கலாமே” என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்