Aran Sei

‘கும்பமேளாவில் போலியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள்’: உத்தரகண்ட் பாஜக அரசு மக்களைப் காக்கத் தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

த்தரகண்ட் மாநில ஹரித்வார் கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கொரோனா சோதனைகளில் மோசடி செய்ததாக ஒரு நிறுவனம் மற்றும் இரண்டு ஆய்வகங்கள் மீது உத்தரகண்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று (ஜூன் 17), ஹரித்வார் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில், அம்மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீஸ் (எம்.சி.எஸ்) மற்றும் டெல்லியைச் சேர்ந்த லால் சந்தானி ஆய்வகம் மற்றும் ஹிசாரை சேர்ந்த நல்வா ஆய்வகம் ஆகிய இரண்டு ஆய்வகங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி செந்தில் அவுதாய் கிருஷ்ணா ராஜ் எஸ், “தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 120 பி (குற்றவியல் சதி), 269 மற்றும் 270 (தொற்று பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

‘முதலில் கும்பமேளா, இப்போது புனிதயாத்திரை; தவறுகளிலிருந்து எதையும் கற்கவில்லையா?’ – உத்தரகாண்ட் அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இந்த ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகளில், 90,000 பேருக்கு தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இவற்றுள், ஏறத்தாழ 36,000 சான்றுகள் போலியானவை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தீபக் பலூட்டியா,  “உத்தரகண்ட் மாநில பாஜக அரசு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் இது நடந்திருக்க முடியாது. இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்