Aran Sei

கும்பமேளா போலி கொரோனா பரிசோதனைகள் விவகாரம் : சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த உத்தரகண்ட் காவல்துறை

த்தரகண்ட் மாநில ஹரித்வார் கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளில் மோசடி நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கை விசாரிக்க ஹரித்வார் மாவட்ட காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் (ஜூன் 17), ஹரித்வார் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில், அம்மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீஸ் நிறுவனம் (எம்.சி.எஸ்) மற்றும் டெல்லியைச் சேர்ந்த லால் சந்தானி ஆய்வகம் மற்றும் ஹிசாரை சேர்ந்த நல்வா ஆய்வகம் ஆகிய இரண்டு ஆய்வகங்கள் மீது கொரோனா சோதனைகளில் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய ஹரித்வார் மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி செந்தில் அவுதாய் கிருஷ்ணா ராஜ் எஸ், “தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 120 பி (குற்றவியல் சதி), 269 மற்றும் 270 (தொற்று பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.

‘கும்பமேளாவில் போலியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள்’: உத்தரகண்ட் பாஜக அரசு மக்களைப் காக்கத் தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகளில், 90,000 பேருக்கு தொற்று இல்லை என்று சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள், ஏறத்தாழ 36,000 சான்றுகள் போலியானவை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 18), மூத்த காவல்துறை அதிகாரி செந்தில் அவுதாய் கிருஷ்ணா ராஜ் எஸ் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “இந்த விவகாரத்தை திறம்பட விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிக்கலான வழக்குகளுக்கு அதிக கவனமும் பலமும் தேவை. ஆகவேதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம், தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

Source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்