Aran Sei

பாஜகவால் `வேல்’ ரத்தம் சிந்தக்கூடியதாக மாறும் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

பாஜக-வின் வேல் யாத்திரை எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் வேல் பாஜகவின் கைகளால் ரத்தம் சிந்தக்கூடியதாக மாறும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி, தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் ‘வெற்றிவேல் யாத்திரை’ நடைபெறவிருக்கிறது. திருத்தணியில் தொடங்கி, திருச்செந்துாரில் நிறைவடையும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

மேலும், யாத்திரையின் அடையாளச் சின்னம் மற்றும் பாடலும் வெளியாகியுள்ளது. பாஜகவின் வேல் யாத்திரை, தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால், இதைத் தடை செய்ய வேண்டும் என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

வேல் யாத்திரைக்கு தடை வேண்டும் – சிபிஎம் பாலகிருஷ்ணன்

 

இந்நிலையில், திருச்சியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சி புறநகர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்கச் செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தமிழகத்தின் வாள் யாத்திரையும் வேல் யாத்திரையும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. கடவுள் முக்கியமல்ல கடவுள் யார் கையில் இருக்கிறார் என்பதுதான் முக்கியம்.” என்று கூறியுள்ளார்.

ரத்தம் சிந்தும் வேல்

வேல் யாத்திரையை பற்றி மேலும் கூறும்போது, “முருகனின் வேல் எங்களுடைய கையில் இருக்கும் போது மக்களுக்கான பாதுகாப்பாக இருக்கும். பாஜகவின் கையில் இருக்கும் போது ரத்தம் சிந்தக்கூடியதாக மாறும். தமிழகம் மதச்சார்பற்ற ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட அற்புதமான மண். இந்த மண்ணில் வேற்றுமை ஏற்படுத்த முடியாது.” என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

கோ பேக் மோடி

ஸ்டாலின், தன்னுடைய மண்ணில் இருக்கிறார் என்றும் தன்னுடைய மக்களுக்காக வாழ்கிறார் என்றும், அவரை கோ பேக் என்று சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தென் இந்தியாவையும் அதன் மக்களையும் ஏற்றுக் கொள்ளாததால்தான் மோடியை கோ பேக் மோடி என்று மக்கள் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.

மருத்துவ இட ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்துப் பேசும்போது, “சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியும் 45 நாட்களாக அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.  ஆளுநர் ஒப்புக்கொள்ளாவிட்டால் சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் இயற்றி அதனைச் சட்டமாக்கலாம். இதனை அதிமுக அரசு ஒப்புக்கொள்ளவில்லை, ஆளுநருக்குக் கடிதம் கூட எழுதவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “புதுச்சேரி அரசு 10% அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு அதனைப் பின்பற்றி அதிமுக அரசு செய்துள்ளது. அதன் பின்னர் ஆளுநர் அழுத்தம் தாங்காமல் ஒப்புதல் அளித்துள்ளார். இது அதிமுகவிற்கும் ஆளுநருக்கும் பாஜகவிற்கும் சம்பந்தமில்லை. இது எதிர்க்கட்சிகளின் வெற்றி.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்