சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் கலால் வரி விதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை வதைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மாறாக, மத்திய பாஜக அரசு 11 முறை கலால் வரியை உயர்த்தி ரூபாய் 20 லட்சம் கோடி வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது என்றும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தி, வரலாறு காணாத பகல் கொள்ளையை மோடி அரசு நடத்தி வருகிறது என்றும் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில் எத்தகைய கொடூரமான போக்கை மத்திய பாஜக அரசு கையாண்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள 2014-ம் ஆண்டு நிலவரத்தோடு 2021-ம் ஆண்டு நிலவரத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை விலையேற்றம்: உள்நாட்டு வளர்ச்சி என்பது இதுதானா? – ராகுல் காந்தி கேள்வி
“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 ஜூன் மாதம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தது. அப்போது, பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 48 ஆகவும், கலால் வரி ரூபாய் 24 ஆகவும், விற்பனை விலை ரூபாய் 72 ஆகவும் இருந்தது. அடக்க விலையை விடக் கலால் வரி 50 சதவிகித அளவிலிருந்தது.” என்று கே.எஸ்.அழகிரி அவ்வறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.
“பாஜக ஆட்சியில் 2021 பிப்ரவரியில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் விலை 50 டாலராகக் குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 31 ஆகவும், கலால் வரி ரூபாய் 60 ஆகவும் உயர்ந்தது. இதனால், பெட்ரோல் விற்பனை விலை ஒரு லிட்டர் இன்று 91 ரூபாயை எட்டிவிட்டது. இதன்மூலம் அடக்க விலையில் கலால் வரி 200 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைவிட அப்பட்டமான பகல் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
’கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு’ – சோனியா காந்தி கண்டனம்
ஆனால், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தாலோ, அல்லது 2014 நிலவரப்படி கலால் வரியை விதித்தாலோ பெட்ரோல் விலை கடுமையாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
“2021 பிப்ரவரி மாதம் நிலவரப்படி, பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 31. ஆனால், தற்போது விற்பனை விலை ரூபாய் 91 ஆக விற்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்த கலால் வரியை விதித்தால், பெட்ரோலை லிட்டருக்கு ரூபாய் 44-க்கு விற்க முடியும். அதேபோல, கலால் வரிக்கு மாற்றாக 28 சதவிகித ஜிஎஸ்டி விதித்தால், 38 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்க முடியும். ஆனால், இதை எதையுமே செய்வதற்கு மோடி அரசு தயாராக இல்லை.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
மீண்டும் நாடாளுமன்றத்தில் வெடித்தெழுந்த மஹுவா – அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
மேலும், “2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 24 ஆக வரி இருந்தது. அது 2021 பிப்ரவரியில் ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 142 சதவிகிதம் உயர்வாகும். இதனால், விற்பனை விலை 22 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் 2014 ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த கலால் வரி, 2021 ஆம் ஆண்டில் 200 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இத்தகைய கொடூரமான கலால் வரி உயர்வின் காரணமாக, மக்கள் மீது கடுமையான சுமையை மத்திய பாஜக அரசு ஏற்றியிருக்கிறது.” என்று கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கெனவே கொரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார வீழ்ச்சியினாலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிற மக்கள் மீது கலால் வரியை உயர்த்திய நடவடிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், கலால் வரி விதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய பாஜக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய மக்கள் விரோதப் போக்கு தொடருமேயானால், பிரதமர் மோடி அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.” என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.