Aran Sei

கூடங்குளம் அணு உலை விரிவாக்க அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

கூடங்குளம் அணு உலையின் விரிவாக்கத்தை உடனடியாக  கைவிட்டு, அதற்கான
அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஒன்றிய அரசுக்கும்,தமிழ்நாடு அரசுக்கும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடந்த வாரம் கூடங்குளம் வளாகத்தில் 5 மற்றும் 6வது உலைகளுக்கான முதற்கட்ட கட்டுமானப்பணிகளுக்கான (“first pour of Concrete”) நிகழ்வு கூடங்குளத்தில் நடைபெற்றது. கூடங்குளம் அணு உலை வளாகம் இதன்மூலம் உலகில் ஒரே இடத்தில 6,000 மெவா உற்பத்தி செய்யக்கூடிய வளாகங்களின் பட்டியலில் இணைந்துள்ளதென தேசிய அணுமின் கழகம் பெருமை பட்டுக்கொண்டது. உண்மையில் இது பெருமைக்குரியதன்று ; கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்” என்று குறிப்
பிட்டுள்ளது.
மேலும் ,கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள முதல் இரண்டு உலைகளுக்கு எதிராக  மூன்றாண்டுகளாக அப்பகுதிவாழ் மக்கள் தொடர்ச்சியாக நடத்தினார்கள். குறிப்பாக, மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், தலித் மக்கள் என உழைக்கும் மக்கள்
அணுசக்திக்கு எதிரான அப்போராட்டதை அறவழியில் நடத்தினார்கள் என்றும், அமைதி வழியில் போராடிய அம்மக்கள் மீது அன்றைய அதிமுக அரசு வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. அதில் நான்கு பேர் பலியானார்கள். அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட கடுமையான வழக்குகள் பதியப்பட்டன என்றும் அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது,”‘மூன்றாம் தலைமுறை அணுவுலை’ என்று தமிழக்தின் தலையில் கட்டப்பட்ட முதல் இரண்டு உலைகளும் இதுவரை 100க்கும் மேற்பட்ட முறைகள் பழுதாகி நின்றுள்ளன. அதனையொட்டி கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராக “பூவுலகின் நண்பர்கள்” தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், ” அணுக்கழிவுகளைக் கையாள அணுக்கழிவு மையம் ஒன்றை ஐந்தாண்டுகளில் அமைக்க வேண்டும்” என்று ஆணையிட்டிருந்தது”என்றும் அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதனை அமைக்காமல் ஐந்து ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய அணுமின் கழகம், “கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை அமைப்பது மிகப்பெரும் சவாலாக இருப்பதால் மேலும் ஐந்தாண்டுகள் கால அவகாசம் வேண்டும்” என கோரியது. ஆதலால், உச்சநீதிமன்றம் மேலும் நான்கு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுத்தது,அந்த காலக்கெடு    அடுத்த ஆண்டுடன் (2022) முடிவடையும் நிலையில், தற்போது அணுக்கழிவு மையத்தின் கட்டுமான நிலை என்ன நிலையில் உள்ளதென தெரியவில்லை எனவும் திருமாவளவன் அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.
இந்நிலையில், “ஏற்கனவே அமைக்கப்பட்ட அணு உலைகள் அடிக்கடி பழுதாகித் திணறிக் கொண்டிருப்பதாலும் அவற்றிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாலும் இங்கே மேலும் இரண்டு உலைகளை அமைக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானதாகும்” என்றும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில், கூடங்குளத்தில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற்று அந்த மக்களுக்கு ஆறுதலை அளித்த திமுக அரசு, கூடங்குளம் விரிவாக்கத்திற்கு அதிமுக அரசு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து தமிழக மக்கள் யாவருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும்,  அதேபோல, அணுவுலை விரிவாக்க முயற்சியை இந்திய ஒன்றிய அரசும் கைவிட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்