Aran Sei

‘நடிகர் திலீப் வழக்கின் விசாரணையை விரைவில் முடியுங்கள்’ – ஆறு மாதம் காலக்கெடு கேட்ட கேரள அரசுக்கு நீதிமன்றம் மறுப்பு

லையாள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை நடத்தி வரும் எர்ணாகுளம் கூடுதல் சிறப்பு நீதிமன்றம், இயக்குநர் பாலச்சந்திரகுமார் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கூடுதலாக ஆறு மாதங்கள் அரசுத் தரப்பிற்கு அவகாசம் தர மறுத்துள்ளது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாதிப்புக்குள்ளான மலையாள நடிகையை, நடிகர் திலீப் கடத்தித் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், திலீப் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், நடிகர் திலீப் பிணையில் விடுதலையானார். வழக்கு விசாரணை எர்ணாகுளம் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அண்மையில், நடிகர் திலீப்பின் நண்பரும், மலையாள இயக்குனருமான பாலச்சந்திரன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிகளை திலீப் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்தது தனக்கு தெரியும் என்று கூறியிருந்தார்.

நடிகர் திலீப் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வீணாக்காதீர் – பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வருக்கு கடிதம்

அதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் திலீப் மீது இயக்குனர் பாலச்சந்திர குமார் எழுப்பிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாதிக்கப்பட்ட நடிகை கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, இவ்வழக்கில், பாலச்சந்திரகுமாரின் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்யக் கோரியும் இது குறித்து புதிய விசாரணையைத் தொடங்க அனுமதிக் கோரியும் இவ்வழக்கு நடைபெறும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த எர்ணாகுளம் கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம், கோரிக்கைகளுக்கு அனுமதியளித்ததோடு, ஜனவரி 20ஆம் தேதி இப்புதிய விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கேரள மாநில அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “புதிய விசாரணை தொடங்கியுள்ளதால், வழக்கின் மொத்த விசாரணையை கெடு விதிக்கப்பட்ட நாளுக்குள் முடிக்க முடியாது. நடிகர் திலீப் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என்று கோரியிருந்தது.

நடிகர் திலீப் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு

அம்மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னதாக, இவ்வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.

இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 1), இயக்குநர் பாலச்சந்திரகுமார் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கூடுதலாக ஆறு மாதங்கள் அவகாசம் தரக் கோரி கேரள அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்க எர்ணாகுளம் கூடுதல் சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.

மாறாக, ஒரு மாதத்திற்குள் மேலதிக விசாரணையை முடிக்குமாறு அரசுத் தரப்பிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சீலிடப்பட்ட கவரில் மேலதிக விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையை கேரள அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

விசாரணைக்கு ஆறு மாதங்கள் கால நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தாக்கல் செய்த மனுவையும் அது நிராகரிக்கப்பட்டதையும் நீதிமன்றம் மேற்கோள் காட்டியுள்ளது.  “இவ்விசாரணையானது 2020ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தற்போது சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள விசாரணையின் தன்மையுடன், பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 1ஆம் தேதிக்குள் – ஒரு மாத அவகாசத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்” என்று நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் மறுவிசாரணை பிப்பிரவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனவரி 9ஆம் தேதி, இவ்வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக திலீப் உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த காவல்துறையினரை கொல்ல சதி – நடிகர் திலீப் மீது புதிய வழக்கு

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 116 (சிறைத்தண்டனையுடன் கூடிய தண்டனைக்குரிய குற்றத்தைத் தூண்டுதல்), 118 (மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்ய திட்டமிடுதல்), 120ஆ (குற்றச் சதிச் செயலில் ஈடுபட்டவர்), 506 (குற்றமிடுதல்) மற்றும் 34 (பலரால் செய்யப்பட்ட குற்றச் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

காவல்துறை அதிகாரியை மிரட்டியதாக நடிகர் திலீப் மீது புகார் – குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

இப்புதிய வழக்கில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து திலீப் உள்ளிட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 9 மணி தொடங்கி, இரவு 8 மணி வரை விசாரணை அதிகாரி முன் ஆஜராகினர்.

Source: Malayala Manorama, New Indian Express, ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்