Aran Sei

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம் – தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை, தமிழசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என்றும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் காலனிய அரசை விட கிரண் பேடி மோசமாக செயல்படுகிறார் – குடியரசுத் தலைவரிடம் நாராயணசாமி புகார்

கிரண்பேடி, துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

புதுச்சேரியை ஆளும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காரங்கிரஸ் அரசிலிருந்து, கடந்து இரண்டு நாளில், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியநிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை பதவி விலகியதைத் தொடர்ந்து, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

கடந்த வாரம் (பிப்ரவரி 10), குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கிரண்பேடி சர்வாதிகாரிபோல் செயல்படுதாகவும், ஆகவே, அவரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி புகார் மனு அளித்தார்.

புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடத்தும் பாஜக – கிரண் பேடியை திரும்பப் பெறுக : நாராயணசாமி எச்சரிக்கை

அந்த மனுவில், சட்ட விதிகள் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை மீறும் விதமாக நிர்வாகம், நிதி மற்றும் கொள்கை விஷயங்களில் ”ஒருதலைபட்சமாக” துணைநிலை ஆளுநர் செயல்படுகிறாரென நாராயணசாமி குற்றம்சாட்டியதோடு,  ஜனநாயகம், கூட்டாச்சி அமைப்பு மற்றும் புதுச்சேரி மக்களை பாதுகாக்கும் விதமாக இந்திய அரசியலைமைப்பின் பாதுகாவலர் என்ற முறையில், குடியரசுத் தலைவர் தலையிட்டு, கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று (பிப்ரவரி 17) புதுச்சேரியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தை தொடங்கிவைக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.

முன்னதாக, பெரும்பான்மையை இழந்த நிலையில், நாராயணசாமி அரசு பதவி விலகப்போவதாக செய்தி பரவியது. ஆனால், இந்த செய்தியை நாராயணசாமி மறுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்