Aran Sei

‘குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்றி மாநில அரசே எழுவரையும் விடுதலை செய்ய அதிகாரம் உண்டு’ – கி.வீரமணி

ந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்படி அமைச்சரவை முடிவெடுத்து, எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு என்றும், அது அரசமைப்புச் சட்டப்படி சரியான நடவடிக்கையாகவும் அமையும் என்றும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 21), அவர் வெளியிட்ட அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் – 30 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனைக் கொடுமையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வது என்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொள்கை முடிவு எடுத்த நிலையில், தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவுப்படியே மாநில அரசுக்கு (அமைச்சரவைக்கு) உள்ள பரந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டிருந்தால், இத்தனை காலதாமதமும், தொடர் குழப்பங்களும் அதன் காரணமாக தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் அவலமும் ஏற்பட்டிருக்கும் நிலை உருவாகி இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

“அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவு (Article) மாநில அரசுக்கு விரிவான அதிகாரத்தை இது சம்பந்தமாக – சிறைக் கைதிகளின் தண்டனை குறைப்பு, மன்னிப்பு, தண்டனை ஒத்தி வைப்பது (Reprieves), இடைக்கால அவகாசம் (Respites), தண்டனை காலத்தை நிறுத்தி வைத்தல் (Remissions of punishment), குறைத்தல் அல்லது தள்ளுபடி செய்தல் போன்றவற்றிற்குத் தந்துள்ளது. இந்த எழுவர் வழக்கில் தேவையற்ற காலதாமதத்தை மாநில ஆளுநர் முந்தைய ஆட்சியில் செய்தபோது, பற்பல காலகட்டங்களில் பலவித காரணங்களும், சாக்குபோக்குகளும் கூறப்பட்டன.” என்று அவர் கூறியுள்ளார்.

எழுவர் விடுதலை விவகாரம்: கூட்டாட்சி உரிமையை மறுத்துள்ள மத்திய அரசு – ஜெயராணி

“உச்சநீதிமன்றத்திடம் அணுக வேண்டும்; அதன் கருத்து முடிவு முக்கியம் என்ற நிலைக்கும் பதில் அங்கிருந்தே கிடைத்தது. பேரறிவாளனை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை,  அதுபற்றி முடிவு எடுக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டது. சி.பி.அய். மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலன் விசாரணைக் குழுவில் இருப்பதால், அதுபற்றி என்று ஒரு காரணமும் சொல்லப்பட்டது. அங்கும் தடையில்லை என்று தெளிவாக்கப்பட்டு விட்டது.” என்று கி.வீரமணி விளக்கியுள்ளார்.

மேலும், “இதன்பிறகு இரண்டாண்டுகளுக்குமேல் சம்பந்தப்பட்ட கோப்பை – விடாமல் அழுத்தமாக வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர், திடீரென்று ‘‘குடியரசுத் தலைவர்தான் இதுபற்றி முடிவு எடுக்க வேண்டும்‘’ என்று கூறிவிட்டார். இந்நிலையில், புதிய தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நிலையில், எழுவர் விடுதலை என்ற நீண்ட கால நிலுவைப் பிரச்சினைக்குத் தீர்வு காண – சிறைச்சாலைகளில் கரோனா தொற்று அதிகமாகும் நிலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டுமென உச்சநீதிமன்றமே கூறியிருந்தபடியாலும், எங்கே தடையை – குடியரசுத் தலைவரிடம் முடிவு இருக்கும் என்ற நிலையை உருவாக்கி விட்டதால், முறைப்படி – இதற்கு தமிழ்நாடு தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாடாளுமன்ற தி.மு.க. கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள்மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்’’ – தடை என்ற ஒன்றை ஆளுநர் ஏற்படுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள முறையான நடவடிக்கையாகும்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அடுத்தகட்டமாக மாநில அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்படி அமைச்சரவை மீண்டும் முடிவெடுத்து, எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு. அது அரசமைப்புச் சட்டப்படி சரியான நடவடிக்கையாகவும் அமையும். இதன்மூலம் அந்த 161 ஆம் பிரிவின்கீழ் உள்ள அதிகாரம் எவ்வளவு பரந்து விரிந்த ஒன்று என்பதை ‘சத்பால் Vs ஹரியானா அரசு’ என்ற வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று முக்கியமாய் உறுதிப்படுத்தியுள்ளது.” என்று கி.வீரமணி தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.

“அதுமட்டுமல்ல, முன்பு நமது கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 1996 செப்டம்பரில் அறிஞர் அண்ணா பிறந்த நாளினையொட்டி, 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்து, ஆளுநர் மாளிகைக்கு கோப்பு சென்றபோது, அங்கிருந்து கி.பு.கோ. (Criminal Procedure Code) படி 15 ஆண்டுகளானால்தான் விடுதலை செய்ய முடியும் என்று உள்ள ஒரு தடையை ஆட்சேபணையாக எழுப்பி, திருப்பி அனுப்பினர்.” என்று அவர் கூறியுள்ளார்.

எழுவர் விடுதலை : `ஆளுநரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது’ – கமல்ஹாசன்

“அதனை முதலமைச்சர் கலைஞர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்கீழ், புதிய முடிவு எடுத்து, அவர்களை விடுதலை செய்த முன்மாதிரியும் தமிழக அரசியல் வரலாற்றில் – தி.மு.க. ஆட்சி வரலாற்றில் இருப்பதால், அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி, தாமதிக்கப்பட்ட நீதியை மறுக்கப்பட்ட நீதியாக்கிவிடாமல், கருணையோடும், கனிவோடும், ஆனால், அதேநேரத்தில் அரசமைப்புச் சட்ட உரிமைப்படியும் மாநில அரசின் உரிமைகளை முறைப்படி செயல்படுத்தியும் நல்ல முடிவுகளை எடுத்து, கனிந்த பயன்பெற்று, மனிதநேயத்தை நிலைநாட்ட முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.” என்று கி.வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 தண்டனை குறைப்புச் செய்ய மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறுகிறது. அது, பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே, 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்தத் தவறைச் சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது.” என்று வலியுறுத்தியுள்ளார்.

7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவரிடமிருந்து ஒப்புதல் வரும் வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்