உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் கேரள மாணவர்கள், தாய்நாட்டிற்கு எப்படித் திரும்புவது என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கப்பெறாமல், ‘இந்தியத் தூதரகம் எங்கே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மற்ற நாடுகளைச் சேர்ந்த சக மாணவிகள் அவர்களின் தூதரகங்களின் உதவியால் தாய்நாடு திரும்பிக்கொண்டிருக்கையில், கேரள மாணவிகளின் தற்காலிக உணவுகளும் அத்யாவசிய பொருட்களும் தீர்ந்துவிட்டதால் என்ன செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.
கார்கிவ் நகரில் உள்ள பெரேமோஹா மெட்ரோ நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கேரளவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் பிரிஜித் பாபு, லேஸ் சிப்ஸ் பாக்கெட்டை மட்டும் வைத்து எத்தனை நாட்கள் வாழ முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“வெள்ளிக்கிழமை, எனது பாகிஸ்தான் நண்பரை அவர்களது பாகிஸ்தான் தூதரகம் வந்து மீட்டெடுத்துக் கொண்டு சென்றது. சனிக்கிழமையன்று எங்கள் மெட்ரோ நிலையத்தில் இருந்த இஸ்ரேலிய மாணவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால், இந்திய தூதரகத்தால் மட்டும் ஏன் எங்களை மீட்க முடியாது? தூதரகத்திலிருந்தோ அல்லது இப்போது என்ன செய்வது என்பது குறித்தோ எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்று பிரிஜித் பாபு கூறியுள்ளார்.
நான்காம் ஆண்டு மருத்துவ மாணவியான ஷஹான்ஷா ஷெரீஃப், வெடிகுண்டுத் தாக்குதல் தொடங்கிய பிப்பிரவரி 24ஆம் தேதி, கார்கிவில் உள்ள பொட்டானிச்னி சாட் மெட்ரோ நிலையத்தில், தனது நண்பர்களுடன் தஞ்சமடைந்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய மக்கள் ஆர்ப்பாட்டம்
“இந்தியத் தூதரகத்தில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எங்கள் மெட்ரோ நிலையத்தில் இருந்து இஸ்ரேலியர்கள் அவர்களுடைய தூதரகத்தால் மீட்கப்பட்டனர். அவர்களுக்காக இரண்டு பேருந்துகள் வந்தன, அதில் ஏறிச் சென்றனர். அவர்களின் தூதரகங்களால் செயல்பட முடியும் எனும்போது, ஏன் நம் தூதரகத்தால் முடியாது?” என்று ஷாஹன்ஷா ஷெரீஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.