Aran Sei

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற கன்னியாஸ்திரி – கான்வென்ட்டை விட்டு வெளியேறச் சொன்ன திருச்சபை நிர்வாகம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற கன்னியாஸ்திரி லூசி கலப்புராவை, கான்வென்ட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (எஃப்.சி.சி) உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

’ஒழுங்கற்ற காரணங்களுக்காக’ அவரை பதவி நீக்கியதற்கு எதிராக, கத்தோலிக்கை திருச்சபைகளுக்கான சட்ட மன்றங்களில் அவர் செய்திருந்த முறையீடு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லூசி கலப்புராவிற்கு, பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை வழங்கியிருக்கும் கடிதத்தில், “உங்கள் பதவி நீக்கத்தை எதிர்த்து முறையீடு செய்யக் கத்தோலிக்க சபைக்குள் எந்தச் சட்ட வழிகளும் இனி இல்லை. எஃப்சிசியின் உறுப்பினராக நீங்கள் தொடர்வதற்கான உரிமை, உறுதியாகவும், திரும்பப் பெறமுடியாத வகையிலும் மறுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்,”இனி நீங்கள் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் கான்வென்ட்களில் தங்குவது சட்டவிரோதமானது” என அந்த
திருச்சபை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்சிசியின் வெளியேற்ற முடிவுக்கு எதிராக கன்னியாஸ்திரி கலப்புரா விடுத்த வேண்டுகோளை வாத்திகன் தேவாலயம் மறுத்துவிட்டதாகவும் பிடிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டுவரை சக கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முலுக்கலுக்கு எதிராக நடந்த போராட்டங்களுக்கு, 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆதரவு தெரிவித்ததற்காக லூசி கலப்புராவை எஃப்சிசி பதவி நீக்கம் செய்திருந்தது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு அக்டோபரில், தனது வாழ்க்கை முறைமூலம் தனது சபதங்களை கன்னியாஸ்திரி மீறியதால் பதவி நீக்கம் செய்ய்பட்டதாக தெரிவித்திருந்த எஃப்சிசி, “வாகனங்களை ஒட்டுதல், கவிதகளை எழுதுதல் மற்றும் வெளியிடுதல், பாலியல் குற்றச்சாட்டு உள்ளான பிஷிப் முலுக்கலுக்கு எதிராக போராட்டங்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக லூசி கலப்புரா பதவி நீக்கம் செய்வதாக , தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பாக, இந்திய மற்றும் வாடிகனில் உள்ள கத்தோலிக்கை திருச்சபைகளில் செய்யப்பட்ட மேல் முறையீடுகள் நிராகரிப்பட்ட நிலையில், கான்வென்ட்டை விட்டு வெளியேற மறுத்த லூசிபுரா, இது தொடர்பாக நீதிமன்றம் முடிவு செய்யட்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

கான்வென்ட்டை காலி செய்யுமாறு  உத்தரவிட்டப்பட்டதற்கு அவர், தான் உண்மையைப் பேசியதால் தனக்கு நீதி மறுக்கப்படுகிறது எனக் கூறியதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்