Aran Sei

டெல்லி பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்களின் சேர்க்கையை ’மார்க்ஸ் ஜிகாத்’ என்ற பேராசிரியர் – வகுப்புவாதத்தை தூண்டுவதாக எழும் கண்டனங்கள்

கேரள மாணவர்களின் சேர்க்கையை ‘மார்க்ஸ் ஜிஹாத்’ என்று குறிப்பிட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை கேரள மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ராகேஷ் குமார் பாண்டே, ஆர்எஸ்எஸ்ஸின் ஆசிரியர் சங்கமான தேசிய ஜனநாயக ஆசிரியர் முன்னணியின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில், டெல்லி பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்களின் சேர்க்கையை குறிப்பிட்டு, “அதிகமான மதிப்பெண்களுடன் கேரள மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தை நோக்கி படையெடுப்பதை, சாதாரணமான ஒன்றாக கருத முடியாது. இது விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “டெல்லி கல்லூரியில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த மாணவர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் திறமையாக இல்லை. அதேபோல், இந்த மாணவர்கள் அனைவரும் 11-ஆம் வகுப்பில் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இல்லை. அப்படியான மாணவர்களை வைத்து அதிக சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது சதியின் ஒரு பகுதியாகும். இது ஒரு ‘மார்க்ஸ் ஜிஹாத்’. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

தனியாருக்கு நிலமளிப்பதை ‘நில ஜிகாத்’ எனக் குற்றம்சாட்டிய பாஜக தலைவர்- சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுப்பட்டிருந்தது ஆர்டிஐ மூலம் அம்பலம்

ராகேஷ் குமார் பாண்டேவின் கருத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்த நிலையில், இதுகுறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய அவர், “ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்திருப்பவர்கள் திட்டமிட்டே, இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். அவர்கள் இப்போது டெல்லி பல்கலைக்கழகத்தையும் ஆக்கிரமிக்க விரும்புகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூர், “உங்களுக்குப் பிடிக்காதவற்றை எல்லாம் ஜிஹாத் பயன்படுத்துவதற்கான எல்லா வரம்புகளையும் தாண்டப்பட்டுவிட்டது. தற்போது டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் அபத்தமாக மார்க்ஸ் ஜிஹாத் என்ற வார்த்தையை பிரயோகித்துள்ளார். சேர்க்கைக்கான முக்கிய அளவுகோலாக மதிப்பெண்களை அதிகமாக நம்பியிருப்பதை நான் எப்போதும் கண்டித்துள்ளேன். ஆனால், இது அபத்தமானது” என்று தெரிவித்திருந்தார்.

பட்டியல் சாதி பெண்ணின் திருமணத்தை லவ் ஜிகாத் என தடுத்து நிறுத்திய வலதுசாரிகள்- மனம் விரும்பி மணம் செய்யவிருந்ததாக பெண் ஒப்புதல்

இவ்விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ராகேஷ் குமார் பாண்டேவின் மிகவும் மோசமான வகுப்புவாத கருத்துகளுக்கு, அவர்மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் ஆகியோருக்கு கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டேவின் கருத்தை ஒன்றிய கல்வி அமைச்சகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கேரளா மாணவர்களுக்கு எதிரான இக்கருத்து மிகவும் அவதூறானதும் வகுப்புவாதமானதும் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் ஜிகாத்திய இயக்கங்களுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆதரவளிக்கிறது – யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

“டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளி மாநில மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த அவர் முயல்கிறார். மாணவர்களிடையே கருத்து வேறுபாட்டை பரப்பும் பொருட்டு, ‘மார்க்ஸ் ஜிஹாத்’ என்ற புதிய வார்த்தையை அப்பேராசிரியர் உருவாக்கி இருக்கிறார். மதங்களுக்கிடையே பிரிவினையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, ‘லவ் ஜிஹாத்’ என்ற கற்பனையான குற்றச்சாட்டோடு, ‘மார்க்ஸ் ஜிஹாத்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்” என்று வி.சிவன்குட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரின் இக்கருத்திற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளின்படி, பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியலாம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் ஆகியோருக்கு கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Source: new indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்