Aran Sei

மலையாள செய்தி சேனலின் தடைக்கு தடை விதித்த நீதிமன்றம் – ஒன்றிய அரசு விளக்கமளிக்க உத்தரவு

நேற்று(ஜனவரி 31), மலையாள தொலைக்காட்சியான மீடியா ஒன்னின் ஒளிபரப்பு உரிமத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் ரத்து செய்திருந்த நிலையில், சில மணி நேரங்களில் அதன் ஒளிப்பரப்பு மீண்டும் தொடரப்பட்டுள்ளது.

மலையாள மொழி செய்தித் தொலைக்காட்சியான மீடியா ஒன்னின் ஒளிபரப்பை, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்ததையடுத்து, நேற்று(ஜனவரி 31) நண்பகலிற்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக, மீடியாஒன் தொலைக்காட்சியின் ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தடை குறித்த விவரங்களை மீடியாஒன் டிவிக்கு ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை. இந்த தடைக்கு எதிராக எங்களின் சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். அச்செயல்பாடுகள் முடிந்த பிறகு, தொலைக்காட்சி தனது ஒளிப்பரப்பை தொடரும். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையில் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட தொலைக்காட்சிகளின் பட்டியலிலிருந்து மீடியாஒன்னை நீக்கியதற்கு எதிராக மீடியாஒன் கேரள நீதிமன்றத்தை நாடியுள்ளது.

மீடியாஒன் சார்பாக சமர்பிக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்த நீதிபதி என் நாகரேஷ் அமைச்சகத்தின் உத்தரவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். அடுத்த விசாரணையை நாளை(பிப்பிரவரி 2) ஒத்திவைத்துள்ளார்.

மலையாள செய்தித் தொலைக்காட்சிக்கு மீண்டும் தடை – பாதுகாப்பு காரணமென ஒன்றிய அரசு விளக்கம்

மேலும், ஒன்றிய அரசின் அறிவுறுத்தலைப் பெறுமாறு கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இந்திய சமூக ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் மீடியாஒன் தொலைக்காட்சி மீதான ஒளிப்பரப்பு தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திடீரென விதிக்கப்பட்ட இத்தடையை தீவிரமான ஒன்றாக பார்க்க வேண்டும். அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்த இடம் இருக்க வேண்டும். இல்லையெனில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், இந்தத் தடையானது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த உத்தரவு ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் மீடியாஒன் தொலைக்காட்சியின் ஒலிபரப்பிற்கு தடைவிதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடும்போது, ​​கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் (ஒழுங்குமுறை) சட்டம், 1998 இன் விதிகளை மீறிய கூறி, மீடியாஒன் தொலைக்காட்சிக்கு 48 மணிநேரம் ஒன்றிய அரசு தடை விதித்தது.

Source: Indian Express, New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்