Aran Sei

விவசாயிகளுக்கு எதிரான ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது : பினராயி விஜயன்

கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுத்த ஆளுநர் ஆரிஃப் மொஹமது கானின் முடிவை முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா விமர்சித்திருப்பதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அனுமதி மறுப்பு

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற போவதாக கேரள அரசின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் இவ்வாரத்தின் தொடக்கத்தில் அறிவித்தார். இதற்காக டிசம்பர் 23 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என்று ஏ.என்.ஐ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்றம் கூடுவதற்கு கேரள ஆளுநர் ஆரிஃப் மொஹமது கான் அனுமதி வழங்க மறுத்தார்.

விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் – கேரள சட்டமன்றத்தை கூட்ட மறுக்கும் ஆளுநர்

சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூடுவதற்கு பதினைந்து நாட்கள் முன்னரே அனுமதி கோர வேண்டும் எனும் விதிமுறையை பின்பற்றாததே அனுமதி மறுக்கக் காரணம் என்று முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு ஜனவரி 8 ஆம் தேதி அனுமதியளித்திருக்கும் நிலையில், “அவசர” காரணத்திற்காக சட்டமன்றத்தை கூட்டும் அளவு இது ( விவசாய சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது) முக்கியமானதல்ல என்றும் கடிதத்தில் கூறியுள்ளார். 

“ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது”

சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்துவதெனும் அமைச்சரவை முடிவிற்கு ஒரு ஆளுநர் மறுப்பு தெரிவிப்பது இதுவே முதல் முறை என்கிறது தி வயர் இணையதளம். 

சட்டமன்ற கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்காதது தொடர்பாக அவருக்கு எழுதிய கடிதத்தில், “கூட்டத்திற்கு அனுமதியளிக்காதது சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது, ஜனநாயக மரபுக்கு எதிரானது” என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.எதிர்கட்சி தலைவர் சென்னிதலாவும் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – கேரள அரசு நிறைவேற்றவுள்ளது

“மோடி அரசால் விவசாயிகளை வீழ்த்த முடியாது”

சிறப்புக் கூட்டம் நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட உடனே, இடது ஜனநாயக முன்ணணி, சட்டமன்றத்திற்கு அருகில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அக்கூட்டத்தில், முதலமைச்சர் பினராய் விஜயனும், கேரள அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் தன் உரையை தொடங்கும் போதே, மோடி அரசை பகிரங்கமாக தாக்கி, பினராயி விஜயன் பேசத் தொடங்கினார் என்கிறது தி வயர்.  “இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம், இந்நாட்டின் மிகப் பெரிய போராட்டம். விவசாயிகளின் தேவைகள், இந்நாட்டின் தேவைகள். மோடி அரசால் விவசாயிகளை வீழ்த்த முடியாது” என்று கேரள முதலமைச்சர் அக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். 

பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள புது விவசாய சட்டங்களை எதிர்க்கும் வகையில், கேரள மாநில அரசு விவசாய சட்டங்களை இயற்றுவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்