Aran Sei

சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்திற்கு பினரயி விஜயன் கடிதம்

த்தர பிரதேச அரசால் கைது செய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்கிடக் கோரி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்குச் செய்தி சேகரிக்க சென்ற சித்திக் காப்பானை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் கீழ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்த உத்தரபிரதேச அரசு கைது செய்தது.  தற்போது, அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

யோகி ஆதித்யநாத்திற்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “கேரளாவை சேர்ந்த சித்திக் காப்பானுக்கு இருதய பிரச்னை இருந்த வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் பிற ஊடகத்துறையினரும் எனது கவனத்திற்கு எடுத்துவந்தனர்” என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

மதுராவில் உள்ள கேவிஎம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சித்திக் உடல்நிலை அபாயகரமாக உள்ள நிலையில் அவரைப் படுக்கையில் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதாகப் பினரயி விஜயன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சித்திக் காப்பானை, அனைத்து மருத்துவ வசதிகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டும் ஒரு பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றி, அங்கிருக்கும் நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஊபா சட்டத்தில் சித்திக் கப்பான் : 5000 பக்க குற்றப்பத்திரிகை சட்டப்படி செல்லாது என வாதம்

சித்திக் காப்பான் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலையிடக் கோரி கேரளாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வந்திருக்கும் நிலையில், இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முன்னதாகச் சித்திக் காப்பானின் மனைவி, ”எனது கணவரைச் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர். அவருக்கு நான்கு நாட்களாக உணவு அளிக்கப்படாததை அடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.” என தெரிவித்திருந்தார். மேலும், கேரள முதலமைச்சர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்