மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப்ரவரி 28), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அந்நூலை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்க, பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்துள்ளார். மாநில மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வரவேற்புரை ஆற்றியுள்ளார்.
சிறப்பு அழைப்பாளராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
விழாவில் பினராயி விஜயன் பேசுகையில், “தமிழர்களும், மளையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள். நாங்கள் சகோதர, சகோதரிகள். மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் நூல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியது மட்டுமின்றி தமிழ் சமூக வரலாற்றையும் கூறுகிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மனதில் திராவிட கொள்கைகள் எப்படி வேரூன்றியது என்பது குறித்து இந்த நூல் கூறுகிறது” என்று கூறியுள்ளார்.
“1960-70களில் இந்தியா அரசியலிலும், சமுதாயத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை படம்பிடித்து காட்டுகிறது உங்களில் ஒருவன் நூல். மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவராக இருந்து கட்சியின் தலைவரானார். இப்படி படிப்படியாக உயர்ந்து முதலமைச்சரானார். கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் நபராக நிற்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.