Aran Sei

‘பாஜகவுக்கு சுங்கத்துறையும் அமலாக்க துறையும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றன’ – பினராயி விஜயன் குற்றச்சாட்டு

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்காக அமலாக்கப் பிரிவு, சுங்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏப்ரல் 6 ஆம் தேதியன்று, கேரள சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் முக்கிய போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பாஜக இருக்கிறது.

இவற்றுக்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல் வழக்கு என்று கூறி, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சுங்கத்துறையினர், அமலாக்கப் பிரிவினரை மத்திய அரசை பயன்படுத்துகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை – அரசின் மிரட்டல் என்று பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

இது தொடர்பாக, நேற்று (மார்ச் 6) அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “கேரளாவில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து மத்திய அரசின் சில விசாரணை அமைப்புகள் அதிரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. அண்மைய உதாரணம், கேரள உள்கட்டமைப்பு முதலீடு நிதி வாரியத்துக்கு எதிராக அமலாக்கப் பிரிவும், சுங்கத்துறையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையாகும்.” என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் பாஜகவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்ய சுங்கத்துறைதான் முன்னணியில் நிற்கிறது என்றும் சுங்கத்துறையின் ஆணையர், நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்தான் இதற்குச் சாட்சி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“டாலர் கடத்தல், தங்கம் கடத்தல் வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த சுங்கத்துறை ஆணையர், அந்த வழக்கோடு தொடர்புடையவர் அல்ல. பிரிவு 164-ன் கீழ் வாக்குமூலம் என்பது மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை அதிகாரி, விசாரணையின்போது பெறுவதாகும். தனிநபர் ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அளித்த வாக்குமூலத்தை வெளியிடக் கூடாது என்று விசாரணை அமைப்புக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ரா : அமலாக்கத்துறை அலுவலகத்தில் “பாஜக மாநில அலுவலகம்” என்று பதாகை வைப்பு

மேலும், “இந்த வழக்கில் தொடர்பில்லாத சுங்கத்துறை ஆணையர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை அவமானப்படுத்தும் நோக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்தியில் ஆளும் கட்சியைப் பாதுக்காக்கும் நோக்கில், அரசியல் நோக்கத்துடன் சுங்கத்துறை செயல்படுகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் இருந்து, காங்கிரஸ், பாஜகவுடன் இணைந்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவமானப்படுத்த முயல்கிறது.” என்று பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

“மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சில விஷயங்கள் குறித்துப் பேசியதை அறிந்தேன். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வி.முரளிதரன்தான் பொறுப்பாக இருந்து வருகிறார். அவர் வெளியுறவுத்துறை இணையமைச்சராகப் பொறுப்பு ஏற்றபின், எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்று கூற முடியுமா? முரளிதரன் அமைச்சராகப் பொறுப்பேற்றபின், தூதரகம் வழியாக தங்கம் கடத்தப்படவே இல்லையா? தூதரகம் வழியாக தங்கம் கடத்தப்படவில்லை என்று கூறிய குற்றம் சாட்டப்பட்ட நபருடன் அமைச்சருக்குத் தொடர்பில்லையா?” என்று அவர் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாஜக அரசை எதிர்த்து கருத்து கூறியதால் குறிவைக்கப்படும் அனுராக் கஷ்யப், தாப்சி பன்னு – எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கையில் தூதரகம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடும் பினராயி விஜயன், “ஆனால், மத்திய வெளியுறவு இணையமைச்சர் அதற்கு எதிராக ஏன் பேசுகிறார். இந்த அமைச்சர்தான் சுங்கத்துறையைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு எதிராகச் செயல்பட வைக்கிறார்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source : ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்