இந்திய ஒன்றிய அரசு கொரோனா தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கேரள சட்டபேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடுமையான கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இச்சூழலில், இன்று (ஜூன் 2) கேரள சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அம்மாநில சட்டபேரவையில் இத்தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
மேலும், தடுப்பு மருந்துகளை சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விநியோகிக்க வேண்டும் என்றும் இத்தீர்மானம் கோரியுள்ளது.
’தடுப்பூசிகள் பெற வெளிநாடுகளிடம் கெஞ்சும் இந்தியா’ : சுப்ரமணியன் சுவாமி கடும் கண்டனம்
இத்தீர்மானம் குறித்து பேசிய வீணா ஜார்ஜ், “கொரோனா தொற்றுடன் உடன் போராடும் இவ்வேளையில், இந்த சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கு இலவச தடுப்பு மருந்தை வழங்க வேண்டும். கொரோனா தொர்றின் முதல் அலை பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியது. இப்போது நாடு இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகிறது. தடுப்பு மருந்து செலுத்துவதை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் செய்தோமேயானால், அது பொருளாதாரத்திற்கும் பெருதவியாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், இலவச தடுப்பு மருந்தை உறுதி செய்வதற்கும் அனைவரும் கைகோர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்களது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்துள்ளனர்.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.