கேரளா மாநிலம் ஆலப்புலா மாவட்டம் படையானிவெட்டம் கோவிலுக்கு வெளியே 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு படையானிவெட்டம் கோவில் திருவிழாவின்போது நான்கு பேர் கொண்ட குழுவால் 15 வயதான அபிமன்யூ என்ற சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யாத நிலையில், இது ’அரசியல் கொலை’ என்றும், இது பாஜக – ஆர்.எஸ்.எஸ் சதி வேலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியிருப்பதாக தி வயர் தெரிவித்துள்ளது.
”கொல்லப்பட்ட சிறுவன் அபிமன்யூவின் அண்ணன் ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்(டிஒய்எஃப்ஐ) உறுப்பினராக உள்ளார். ஆனந்தை தேட முடியாத நிலையில், அவரின் தம்பி அபிமன்யூ கொல்லப்பட்டிருக்கிறார்” என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ. ரஹிம் கூறியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம் (எஸ்எஃப்ஐ), இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தி வயர் கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஷு பண்டிகை தினத்தன்று இந்தக் கொலை நடத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பல முந்தைய நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு ஆர்.எஸ்.எஸ் தங்கள் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திருவிழா மற்றும் விடுமுறைநாட்களை தேர்ந்தெடுத்துள்ளது. ஊடகங்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கொலையை மறைக்கத் திருவிழாக்காலங்களில் செய்யப்படுகிறது. இந்தக் கொலையின் பின்னணியில் கிரிமினல் சதிக்கான தெளிவான காரணங்கள் இருக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிமன்யூவின் கொலையில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் பங்கு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மாநில பாஜக தலைவர்கள் மறுத்துள்ளதாக, தி வயர் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ரஃபேல் பேர ஊழல் பற்றிய விபரங்கள் – அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் சொல்லும் பாடம்
”விசாரணை ஆரம்பகட்டத்தில் இருக்கும் நிலையில், கொலைக்கான உள்நோக்கம் குறித்து கூறுவது முதிர்ச்சியற்றது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே கூற முடியும்” என காவல்துறை தரப்பில் கூறப்படுவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.