Aran Sei

‘மருத்துவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும், தெருக்களில் அல்ல’ – பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லியில் நடைபெறும் மருத்துவர்களின் போராட்டத்தைப் பற்றி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (28.12.2021) பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு நடத்தக் கோரி பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, டெல்லி காவல்துறையினர் மிருகத்தனமான தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ள, டெல்லியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களின் சங்கங்கள் தங்களுடைய மருத்துவ சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவோம் என்று எச்சரித்துள்ளன.

கடந்த ஒரு மாதமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு, தங்களுடைய உறுப்பினர்கள் 4,000 பேர் கொரோனா தடுப்பு இரவு நேர ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கும் விதமாக, நேற்று(டிசம்பர் 27) நள்ளிரவு சரோஜினி நகர் காவல் நிலையத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியதாகக் கூறியுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தின் நகலை டிவிட்டரில் பதிவிட்டு கீழ்க்கண்ட கருத்துக்களை அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் புதிய உருமாற்றமான ஒமிக்ரான் வேகமாகப் பரவி வரும் வேளையில் டெல்லியில் ஒன்றிய அரசு மருத்துவர்கள் நீண்ட நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுநோயின் போது தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தீவிரமாக பணியாற்றிய ஏராளமான மருத்துவர்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அயராது பணியாற்றினர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது ​​காவல்துறை வன்முறையில் ஈடுபட்டு அவர்களைத் தாக்கியது வருத்தமளிக்கிறது. மருத்துவர்கள் மீதான காவல்துறையின் மூர்க்கத்தனமான நடவடிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் வேளையில் மருத்துவர்கள் மருத்துவமனைகளில் இருக்க வேண்டும், தெருக்களில் அல்ல.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு தாமதத்தால் மருத்துவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவதால் மீதமுள்ள மருத்துவர்களுக்கு வேலைச்சுமையும் அதிகரிக்கிறது.

எனவே மருத்துவர்களின் பிரச்சினையைத் தனிப்பட்ட முறையில் விரைவில் பேசி தீர்க்க வேண்டும். முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் கலந்தாய்வை துரிதப்படுத்த வேண்டும். மருத்துவர்களின் கோரிக்கைகளைப் பிரதமர் விரைவில் ஏற்க வேண்டும்.

என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அந்த கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

Source: the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்