Aran Sei

நோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்

credits : freepressjournal

க்களின் எதிர்ப்புணர்வை நசுக்கும் அரசாங்கத்தை கண்டித்து பலர் குரல்கொடுத்ததன் விளைவாகவே, தீஷா ரவி மற்றும் நோதீப் கவுருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக மீனா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியில், ஒரு பகுதியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹரியானா மநில அரசு இணையத்தை துண்டித்தது.

இந்தச் செய்திகள் சர்வதேச அளவில் பரவியதைத் தொடர்ந்து, அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்க பாப் பாடகர் ரிஹான்னா, சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் , அமெரிக்க துணை அதிபரின் உறவினர் மீனா ஹாரிஸ், திரைக் கலைஞர் மியா காலிஃபா, அமண்டா கெர்னி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி

இந்திய வெளியுறவுத் துறை இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சர்வதேச பிரபலங்களின் கருத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. ஐக்கிய ஹிந்து முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கிரேட்டா துன்பெர்க், ரிஹான்னா, மீனா ஹாரிஸ் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்திய விவகாரங்களில் சர்வதேச தலையீடு பொறுத்துக் கொள்ளப்படாது, என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

“இந்திய விவசாயிகளின் மனித உரிமைகளுக்கு ஆதரவாக நான் குரல் கொடுத்தேன். அதற்கான எதிர்வினையை பாருங்கள்” என்று அப்போது ட்வீட் செய்த மீனா ஹாரிஸ், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகிறார்.

இந்நிலையில், இன்றைய தினம் சூழலியல் செயல்பாட்டார் தீஷா ரவி மற்றும் தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மீனா ஹாரிஸ் “ இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்புணர்வை நசுக்கும் அரசாங்கத்தை கண்டித்து பலர் குரல்கொடுத்ததன் விளைவே இது (ஜாமீன்) என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து குரல் கொங்கள், இந்த சண்டை முடிய இன்னும் வெகுதூரம் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்