Aran Sei

காட்டுப்பள்ளி துறைமுகம், தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை – கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கு, தமிழ்நாடு கடல்சார் வாரியம் (Tamil Nadu Maritime Board) ஒப்புதல் வழங்கியுள்ளதாக, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சூக் மண்டாவியா, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ள அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்: “நமது நாட்டை முதலாளிகளுக்கு விற்கும் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணி, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள கலாநிதி வீராசாமி, இந்த விரிவாக்கப் பணி நடைபெற்றால், திருவள்ளுர் மற்றும் சென்னை மாவட்டங்களை வெள்ளம் பாதிக்கும் அபாயம் இருப்பதும், பல மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் நிலை ஏற்படும் என்பதும் அரசுக்குத் தெரியுமா என்றும் கேட்டுள்ளார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ள அமைச்சர், காட்டுப்பள்ளியில் எந்தத் துறைமுகத்தையும் அரசு, தனியாரிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

“இருந்தபோதும், தமிழக கடல்சார் வாரியம், காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கு, தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது” என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் : மக்கள் போராட்டத்தின் எதிரொலி – கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னர், எதிர்மறை தாக்கத்தைப் போக்கும் வகையில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்துவது உட்பட, தேவையான ஒப்புதல்களை பெற வேண்டும் என்றும் மன்சூக் மண்டாவியா பதில் அளித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியும், சுற்றுச்சூழல் அனுமதியும் இதுவரை பெறப்படவில்லை என்றும், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் மன்சூக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், மக்களிடையே எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம், கருத்து கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்