கடந்த திங்கட்கிழமை (16.11.21) காஷ்மீரின் ஹைதர்பூரா பகுதியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிந்த நிலையில், அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல், ஸ்ரீநகரிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹைதர்பூரா மலைப் பகுதியில் காவல்துறையினரால் அடக்கம் செய்யப்பட்டதாக தி இந்து செய்தி கூறுகிறது.
உடல்கலை ஒப்படைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் காவல்துறை உடல்களை தரவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடல்கலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஸ்ரீநகரில் நேற்று (17.11.21) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மருத்துவர் முதாசிர் கவுர் என்பவரின் மனைவி தன்னுடைய கணவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தி இந்து-விடம் கூறியுள்ளார். “என்னுடைய கணவர் பயங்கரவாதி என்று நிரூபித்தால் என்னையும், என்னுடைய இரண்டு வயது மகளையும் காவல்துறை சுட்டுக்கொல்லட்டும்… தற்போது என்னுடைய மகளை அவருடய தந்தையின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க அனுமதியுங்கள்” என்று மருத்துவர் முதாசிரின் மனைவி ஹூமைரா கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல், கொல்லப்பட்ட அல்தாஃப் பட் என்பவரின் சகோதரரான மருத்துவர் அனீஃப் அகமது, தன்னுடைய சகோதரருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை என்று காவல்துறையே கூறியுள்ளபோதும், அவருடைய உடலையும் அடக்கம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியதாக தி இந்து கூறுகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு நபரான அமில் அஹமத் என்பவரின் தந்தை அப்துல் லத்தீஃப் “அவன் உதவியாளராக வேலை பார்த்து வந்தான். எங்களுடைய குடும்பம் பயங்கரவாதிகளை கொலை செய்த அச்சத்தால் இடம் பெயர்ந்து வந்தது. தற்போது எங்களையே பயங்கரவாதிகள் என்று கூறுகிறார்கள்” என்று தெரிவித்ததாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில், பயங்கரவாதி ஒருவரை அப்துல் லத்தீஃப் கல்லால் அடித்து விரட்டிக் கொன்றுள்ளதாகவும், அவரின் இந்த வீரச் செயலலை பாராட்டி காவல்துறை சார்பாக அவருக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டதாகவும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் அப்பகுதியிலிருந்த அப்புறப்படுத்தினர். இதன்பிறகு, ஹைதர்பூரா துப்பாக்கிச் சூடு குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த துணை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் “குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் இந்த விசாரணையின் அறிக்கை பெறப்பட்ட பிறகு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஜம்மு காஷ்மீர் மக்களின் உயிரை பாதுகாப்பதிலும் அவர்களுக்கு அநீதி நிகழாமல் தடுப்பதிலும் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.