காஷ்மீர் அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவல் வைக்கப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில், எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் வகையில், ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகிய மூன்று முன்னாள் முதல்வர்களும், மற்ற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் செயல் இந்துத்துவா பாசிஸ்டுகளின் கோழைத்தனத்தின் பிரதிபலிப்பு என்றும், இது நாட்டின் ஜனநாயகத்தின் மீது அறையப்பட்ட சவப்பெட்டியின் மற்றொரு ஆணி என்றும் பைஸி கடுமையாக சாடியுள்ளார்.
ஜம்மு பிரிவில் 6 இடங்களையும், காஷ்மீரில் ஒரு இடத்தையும் அதிகரிக்கும் எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவுக்கு எதிராக, குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி சனிக்கிழமை ஸ்ரீநகரில் அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த அதிகரிப்பு முந்தைய மாநிலத்தின் இரு மாகாணங்களின் மக்கள்தொகை விகிதத்திற்கு எதிரானது என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர் கூறும்போது, “காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருதும் பாசிச பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, காஷ்மீரிகளின் மனித, அடிப்படை மற்றும் சிவில் உரிமைகள் மீறப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்தின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமையை மத்திய அரசு வெட்கக்கேடாக மீறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பாசிஸ்டுகள் மக்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது காஷ்மீர் அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவல் தெளிவாக்குகிறது. மக்கள் மீதான அரசாங்கத்தின் இந்த அச்சம், நாட்டில் பாசிசத்தை ஒற்றுமையாக எதிர்க்கவும், தோற்கடிக்கவும் மக்களுக்கு ஒரு உறுதுணையாக அமைய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் ஃபைஸி அறிவுறுத்தினார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.