Aran Sei

கார்த்திக்ராஜா எனும் கானதேவன் – வள்ளியப்பன் நடேசன்

மிஷ்கினின் பிசாசு-2 படத்தில் இசை கார்த்திக்ராஜா என்று பார்த்தபொழுது ஆச்சர்யம் வரவில்லை. இப்பொழுதாவது அவருக்கான களம் கிடைக்கிறதே என்ற உணர்வுதான் வந்தது. ஏனெனில் சிறந்தவர்களிடம் இருந்து சிறந்ததைக் கொண்டுவர மிஷ்கினால் முடியும்.

1992-ல் ரஜினி நடித்த பாண்டியன் படத்தில் வரும் பாண்டியனின்  ராஜ்யத்தில் உய்யலாலா’ பாடலைக் கேட்டபொழுது, இளையராஜா ரசிகர்களுக்கு அது ஒரு வழக்கமான இளையராஜா படலைப்போல் தோன்றவில்லை. இந்தப் பாடலை மட்டும் அவரது புதல்வர் கார்த்திக்ராஜா கம்போசிங் செய்ததாகச் சொன்னார்கள். முதல் பாடலிலேயே தன் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். அப்பொழுதுதான் கார்த்திக்ராஜா என்ற பெயர் முதன் முதலில் வெளியில் வரத்துவங்கியது.

‘ இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் ‘ – எஸ்பிபி இசை அஞ்சலி

அப்போதே அவர்மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனோ அதற்குப்பிறகு அவர் முழுப்படங்களுக்கு இசை அமைக்காமல் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள்(1992-96) இளையராஜாவின் இசையில் வந்த படங்களுக்கு பின்னணி இசை மட்டுமே செய்திருக்கிறார். ( உழைப்பாளி, பொன்னுமணி, தர்மசீலன், சர்கரைத்தேவன், ஆத்மா, அமைதிப்படை, ராசாமகன்) இதில் பொன்னுமணியில் ‘ஏய் வஞ்சிக்கொடி’ என்ற பாடலும், ஆத்மா படத்தில்  ‘நினைக்கின்ற பாதையில்’ என்ற பாடல்களுக்கு மட்டும் கம்போஸ் செய்திருந்தார். ஆனால் இவையெல்லாம் அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பாடல்களை இப்போது கேட்டால் இளையராஜா இசையில் இருந்து விலகி அமைத்திருக்கும் வித்தியாசம் புரியும்.

 

சமீபத்தில் ‘இளையராஜா75’ விழாவில் போகிறபோக்கில், ரஜினி ஒரு தகவலைச் சொன்னார். 1993-ல் வந்த வள்ளி படத்திற்கு முழு இசையையும் கார்த்திக் ராஜாதான் அமைத்தாராம், ஆனால் சில வணிக நோக்கங்களுக்காக அதில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டதாம். இதன்படி பார்த்தால் வள்ளிதான் அவரது முழு இசையில் வந்த முதல் படம். ஆனால் 1996ல் வந்த ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ என்ற மொக்கை படம் அவரது முதல் படமாக அமைந்தது அவரது துரதிஷ்டம். அதில் கூட ‘ச்சம் ச்சம் பூமஞ்சம்’, ‘என் ராசி மகர ராசி’ என்ற இரண்டு நல்ல பாடல்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

இதற்கு அடுத்த வந்த ‘மாணிக்கம்’ என்ற படத்தின்  ‘சந்தனம் தேச்சாச்சு’, ‘ராக்கம்மா ராக்கம்மா, ‘உனக்கென ராசா நான்தானே’ போன்ற பாடல்கள் கொஞ்சம் கவனிக்க வைத்தது. ஆனால் படத்தின் தோல்வி பாடல்களையும் சேர்த்து அமுக்கிவிட்டது. இந்தப் படத்தில்தான் நம்ம வத்திக்குச்சி வனிதா அறிமுகமானார் என்பது ஒரு கொசுறுத்தகவல். இதே வருடத்தில் வந்த அலெக்சாண்டர் என்ற படத்தில்  ‘நதியோரம் வீசும் தென்றல்’ என்ற பாடல் மட்டும் கார்த்திக்ராஜா பேரைச்  சொல்லியது.

1997ல் வந்த ‘உல்லாசம்’ படத்தின் முழு ஆல்பமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதில் எந்த பாடலையும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் அனைத்துப் பாடல்களும் மிகச்சிறப்பாக இருக்கும், இன்னும் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் இளையராஜா மற்றும் பவதாரிணி குரலில் நம் மென்சோகத்தைக் கிளறும் ’யாரோ யார் யாரோ’ பாடல், மென் காதலைச் சொல்லும் ’வீசும் காற்றுக்கு’ கமல்ஹாசனின் வித்தியாசமான குரலில் கொண்டாட்ட உணர்வைத்தரும் ’முத்தே முத்தம்மா’ பாடல்களும் ’கொஞ்சும் மஞ்சள் பூக்கள்’ என்ற பாஸ்ட்  மெலோடி பாடலும், இப்படி கலவையாக ஒரு அற்புதமான உணர்வைத் தந்தது இந்த ஆல்பம்.

‘இசை அண்ணாமலை’ – தேனிசை தென்றல் தேவா – மலர்வண்ணன்

1998ல் வந்த நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் வந்த ’இந்தச் சிரிப்பினை எங்கு பார்த்தேன்’, ’ஐலசா ஐலசா’, ’கட்டான பொண்ணு’, ’ஹலோ மிஸ்டர் காதலா’ போன்ற பாடல்கள் இளைஞர்களின் ரிப்பீட் மோட் ஆனது. இதே வருடம் அடுத்து வந்த காதலா காதலா என இரண்டு படத்தின் ஆல்பங்களும் ஹிட் அடித்தன. இருந்தும் 98ல் இருந்து 2000 வரை இரண்டு வருடங்கள் இவரது இசையில் படங்களே வரவில்லை. 2001ல் இவரது இசையில் ஏழு  படங்கள் வெளியாயின ஒரு இந்தி மற்றும் ஒரு கன்னடப்படம் உட்பட. கார்த்திக்ராஜாவின் சிறப்பான வருடம் என்று இதைக் கூறலாம்.

நன்றி : Cinema Express

இந்த வருடத்தில்தான் Grahan என்ற ஹிந்தி படத்தின் பாடல்கள் தாறுமாறு ஹிட் அடித்ததின் விளைவு Filmfare R.D.Burman Award for New Music Talent விருது கிடைத்தது. தமிழிலும் இந்த வருடம் சிறப்பான ஆல்பங்கள் வெளியானது. வாஞ்சிநாதன், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், இதுபோக Hum Ho Gaye Aapke, Mitr.MyFriend போன்ற படங்களுக்கு பின்னணி இசையும் வழங்கினார். உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் வந்த ’கவிதைகள் சொல்லவா’ என்ற பாடலும் ’அன்பே என் அன்பே’ என்ற பாடலும், டும்டும்டும் படத்தில் வந்த ’உன் பேரைச் சொன்னாலே’, ’ரகசியமாய் ரகசியமாய்’ என்ற பாடல்களை தவிர்த்துவிட்டு அனைத்துக்காலகட்ட மெலோடி பாடல் தொகுப்பை தயாரித்துவிட முடியாது.

https://www.youtube.com/watch?v=5TABCw8xqJ8

2002ல் வந்த ஆல்பம் படத்தில் வந்த செல்லமே செல்லம் பாடல் அப்போதைய காதலர்களின் தேசியகீதமானது. இதே ஆல்பத்தில் வந்த ’காதல் வானொலி’ பாடல் இப்போது கேட்டாலும் அவ்வளவு புதிதாக இருக்கும் அதன் கம்போசிஷன். ஆனால் இதற்குப் பிறகு இன்றுவரை  கிட்டத்தட்ட முப்பது படங்கள் மட்டுமே இவர் இசையமைத்து வெளியானது. ஆனால் அவருக்குக்கான படமாக எதுவுமே அமையவில்லை. இளையராஜா, ரஹ்மான், யுவன் போன்றவர்களுக்கு அமைந்த இயக்குனர்கள் போல் இவருக்கு அமையவில்லை என்பது பெரிய குறை. அல்லது இவரை மட்டும் இளையராஜா தன் நிழலியே வைத்துக்கொண்டதால் நல்ல இயக்குனர்கள் இவரை அணுகுவதை தடை செய்துவிட்டது எனலாம்.

‘ இவன் தொண்ட குரல்வளையில ஒரு முத்தம் கொடுக்கணும் ‘

2018ல் வந்த படைவீரன் பாடல்கள் பழைய கார்த்திக்ராஜாவை மீட்டெடுத்துக் காட்டியது. அதுபோக யுவனின் தயாரிப்பில் வரும் மாமனிதன் படத்தில் இளையராஜா, கார்த்திக்ராஜா மற்றும் யுவன் மூவரும் சேர்ந்து இசை அமைக்கிறார்கள் என்ற செய்தி இசை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. அந்தப் படத்தின் பாடல்களுக்கு ஆவலுடன் காத்திருக்கும் பொழுது மிஷ்கினின் பிசாசு-2 பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இளையராஜா என்ற பெரிய ஆலமரத்தின் கீழ் வளர்ந்திருந்தாலும் கார்த்திக்ராஜாவின் இசையில் ஒரு தனித்துவம் இருக்கும். சமயங்களில் யுவனிடம் கூட இளையராஜா எட்டிபார்ப்பார். ஆனால் கார்த்திக்ராஜாவின் பாடல்களில் அதை உணர முடியாது. அதுதான் அவரது தனித்துவம்.

தனி ஆல்பங்களில் இருந்தும், பழைய பாடல்களில் இருந்தும் உருவி பாடல்களைக் கொடுத்து, பின்னணி இசை என்றால் என்னவென்றே தெரியாமல் நம் காதுகளைப் பதம் பார்க்கும் ஆட்களே இங்கு இசையமைப்பாளர்கள் என்று வலம்வரும் போது, கார்த்திக்ராஜா போன்ற தனித்துவமும் திறமையும் நிறைந்தவர்களுக்கு போதுமான வாய்ப்பும், களமும் இதுவரை கிடைக்காதது சோகமே. பிசாசு-2 படத்திற்குப் பிறகு இந்தச் சோகம் தொடராது என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் கார்த்திக்ராஜாவைப் போலவே!

– வள்ளியப்பன் நடேசன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்