Aran Sei

பாஜக நிர்வாகிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறும் முடிவு – கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

Image Credits: The Financial Express

பாஜகவை சேர்ந்த 61 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதற்கான மாநில அரசின் முடிவுக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 தேதியிட்ட எடியூரப்பா அரசின் உத்தரவு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 321 வது பிரிவின் கீழ் 61 பாஜக நிர்வாகிகள் மீதான வழக்கைத் திரும்பப் பெற அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்துக் கர்நாடகாவின் மக்கள் சுதந்திர சங்கம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதனை தலைமை நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி விஸ்வாஜித் ஷெட்டி அடங்கிய அமர்வு விசாரித்துள்ளது.

2021-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதிக்குள் அரசு தரப்பு விளக்கத்தைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

“2020-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31, தேதியிட்ட உத்தரவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படக் கூடாது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடக அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973-ன் 321 வது பிரிவின் கீழ் இந்த வழக்குகளை கைவிட்டது. இது மாநில அரசுக்கு ‘வழக்குத் தொடரப்படுவதைத் திரும்பப் பெறுவதற்கான’ அதிகாரத்தை அளிக்கிறது.

2020-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31 அன்று, துணைக்குழுவின் தலைவராக இருந்த உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயின் பரிந்துரையின் அடிப்படையில் எடியூரப்பா அரசு, சட்டம், சுற்றுலா மற்றும் வேளாண் அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது.

மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா, மண்டியா சுயேட்சை எம்பி சுமலதா அம்பரிஷ், யெல்புர்கா தொகுதி பாஜக எம்எல்ஏ ஹல்லாபா ஆச்சார், ஹோனலி தொகுதி பாஜக எம்எல்ஏ மற்றும் முதல்வரின் அரசியல் செயலாளர் எம்பி ரேணுகாச்சார்யா உட்பட மேலும் பல மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.

2014-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டு மே 5-ம் தேதி வரை 570 க்கும் மேற்பட்ட வழக்குகள் அடுத்தடுத்த அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசின் இந்தச் செயலை எதிர் காட்சிகள் மட்டுமல்லாமல் பல குடிமை குழுக்களும் கண்டித்ததாக இச்செய்தி கூறியுள்ளது. ‘பொது விஷயங்களுக்காக’ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான் என்றும் கூறி மாநில அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்