Aran Sei

தலித் குழந்தை கோவிலுக்குள் நுழைந்ததால் ‘தீட்டு’ – கோவிலைச் சுத்தம் செய்ய 23,000 அபராதம் விதித்த ஆதிக்கச் சாதியினர்

ர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் ஹனுமசாகர் அருகே உள்ள மியாபுரா கிராமத்தில் அஞ்சிநேயர் கோவிலுக்குள் 2 வயது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குழந்தை நுழைந்ததால் பெற்றோருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4 ஆம் தேதி, குழந்தைக்குப் பிறந்தநாள் என்பதால், பெற்றோர் அக்குழந்தையை ஆஞ்சிநேயர் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பதால், அவர்கள் என்றைக்கும்போல கோவிலின் முன் நின்று குடும்பத்துடன் வழிபட்டுள்ளனர். ஆனால், குழந்தை உற்சாகத்துடன் கோவிலுக்குள் நுழைந்து, ஆஞ்சிநேயரை வழிபட்டுவிட்டு திரும்பி வந்துள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த குழந்தை உள்ளே நுழைந்ததால் கோவிலுக்கு இழிவும் அசுத்தமும் ஏற்பட்டுவிட்டதாக கூறி, ஆதிக்கசாதி கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து முடிவெடுக்க, செப்டம்பர் 11 ஆம் தேதி, ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளனர். அக்கூட்டத்தில், அஞ்சிநேயர் கோவிலின் சுத்திகரிப்பு பணிகளுக்கு செலவிடப்படும் ரூ.23,000-ஐ அபராதமாக செலுத்தும்படி அக்குழந்தையின் பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

இச்சம்பவம் குறித்து அறிந்த கொப்பல் மாவட்ட நிர்வாகமானது காவல்துறை, வருவாய் துறை மற்றும் சமூக நலத் துறை அதிகாரிகளை அக்கிராமத்திற்கு அனுப்பி, கிராம மக்களுக்கும் தீண்டாமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

இதை மீண்டும் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அபராதம் விதித்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொப்பல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஸ்ரீதர் இந்தோ ஏசியன் நியூஸ் சர்வீஸிடம் பேசியபோது, “குற்றவாளிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். குழந்தையின் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். புகார் கொடுக்கும்படி காவல்துறை பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்றபோது, புகார் கொடுப்பதன் வழியாக இரு சமூகத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்களின் சமூக மூத்தவர்கள் கூடி முடிவு செய்துள்ளதாக கூறினார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

வலதுசாரிகள் தலித்துகள் மேல் காட்டும் கரிசனம் உண்மையானதா? – வரலாறு சொல்வது என்ன?

மேலும், “ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மக்கள் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Source: Tribune India

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்