Aran Sei

‘மம்தாவை ஏன் ஜான்சி ராணி என அழைக்க வேண்டும்’ – விளக்கம் அளிக்கும் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல்

தேர்தல் ஆணையத்தின் உதவிக்கொண்டு மத்திய அரசு, மம்தா பானர்ஜிக்கு தொந்தரவுக் கொடுத்தாலும், மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றுள்ளதால் மம்தாவை ஜான்சி ராணி என்றுதான் அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இன்று (மே 5), ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “அண்மையில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படவில்லை. அசாமிலும் கேரளத்திலும் தோல்வியையே அடைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் காங்கிரஸால் ஒரு தொகுதியைக் கூட பெற முடியவில்லை. இதுதொடர்பாக, இப்போது கட்சிக்குள் எழுந்திருக்கும் குரல்களைப் பொருட்படுத்தி, ​​இந்தத் தோல்விகுறித்து ஆராய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய கட்சியுடன் கூட்டணி – காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ள ஆனந்த் சர்மா

ஏன், காங்கிரஸ் தலைவர்கள் மம்தாவை ஜான்சி கி ராணி (ஜான்சி ராணி) என்று அழைக்கிறார்கள் என்று ஏஎன்ஐ  சார்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது. அதற்குப் பதிலளித்த அவர்,  “2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வெற்றி பெற்றபோது, ​​நான் அவரை வாழ்த்தினேன். அவரை ஜான்சி கி ராணி என்று அழைத்திருக்க முடியாது. ஏனெனில் அவர் கோலியாத் (பேருருவம் கொண்ட கோலியாத் என்ற போர் வீரனை, தாவீது என்ற சிறுவன் தன் கவட்டை கல்லால் வீழ்த்தி, கோலியாத்தின் தலையைக் கொய்ததாக யூத வேத நூலான விவிலியம் குறிப்பிடுகிறது). வெற்றி பெற்ற தலைவர்களை நாம் வாழ்த்த வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உதவிக்கொண்டு மத்திய அரசு, மம்தா பானர்ஜிக்கு தொந்தரவுக் கொடுத்தது. ஆனாலும், மம்தா ஜி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றார். அதனால், அவரை ஜான்சி ராணி என்றுதான் அழைக்க வேண்டும்.” என்று பதிலளித்துள்ளார்.

‘மம்தா பானர்ஜி இன்று நம் நாட்டின் தலைவராக உருவெடுத்துள்ளார்’ – காங்கிரஸ் தலைவர் கமல் நாத்

அண்மையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையின் மேல் அதிருப்தி கொண்ட மூத்த தலைவர்கள் 23 பேர் (ஜி 23 என்று அழைக்கப்படுகின்றனர்) ஜம்மு காஷ்மீரில் பேரணி நடத்தினர். காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாகாவும், காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் நடத்தவும், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த அதிருப்தி குழுவில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் கபில் சிபலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்