Aran Sei

நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்

டலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த    கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை சம்பவத்தில் ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்திருக்கிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம்  இன்றைய தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான கண்ணகியின் அண்ணன்  மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விருதாச்சலம் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோர் உட்பட எஞ்சிய 13 பேருக்கும்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நினைவை வதைக்கும் வாதை – கண்ணகி முருகேசன் நினைவு நாள்

இந்திய சமுகத்தைப் பொறுத்தவரை சாதி என்பது மிகமுக்கியமாக  அதிகாரமையமாக இருக்கிறது. அது விளிம்பு நிலையில் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் வர்க்கங்களுக்குக் கூட தாங்கள் மட்டுமே  உயர்ந்தவர்கள் என்கிற மனநிலையை, முற்றிலும் மனிதத்தன்மைக்கு எதிரான உணர்வை வழங்கக்கூடியதாக உள்ளது.  அத்தகைய  சாதியை இழிமையின் உச்சமாக நடந்தேறிய சம்பவம் தான்  கண்ணகி- முருகேசன் படுகொலை.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்  துரைசாமியின் மகள் கண்ணகியும், குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசனும்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது காதலிக்கத் தொடங்கினார்கள்.

கடந்த  05.05.2003 அன்று கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து  பதிவுத் திருமணம் செய்து கொண்ட இருவரும், அவரவர் வீட்டில் தனித்தனியே வசித்து வந்த நிலையில்,   இதனைத்தொடர்ந்து சிறிது நாட்கள் கழித்து  இருவரும் அவர்கள் ஊரிலிருந்து  வெளியேறி வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தனர்.

கண்ணகியின் காதல் விவகாரம் அவரது குடும்பத்திற்கு தெரிய வரவே, கண்ணகியின்  குடும்பத்தினர்  தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியும் தாக்கினர்.

அநீதியை எதிர்ப்பதுதான் அறம் – (கண்ணகி – முருகேசன்) வழக்கறிஞர் ரத்தினத்தோடு ஓர் உரையாடல்

இதனைத்தொடர்ந்து,  தந்திரமாக முருகேசனை மட்டும் ஊருக்கு வரவழைத்தவர்கள், முருகேசனின் இரு கைககளையும் கால்களையும் பின்புறமாக கட்டி ஊரின் மையப் பகுதியில் போடப்பட்டிருந்த போர்வெல் குழிக்குள் தலைகீழாக இறக்கி இறக்கி தூக்கியுள்ளனர். மேலும், மூங்கில்துறைப்பட்டில் இருந்த  கண்ணகியின் இருப்பிடத்தைக் கண்டறிந்த அவர்கள், கண்ணகியையும் கூட்டி வந்தனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று கண்ணகியும், முருகேசனும் குப்பநத்தம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குக் கூட்டி செல்லப்பட்ட நிலையில், அங்கு வைத்து முருகேசனைக் கடுமையாக தாக்கியுள்ளனர்.

அந்தச் சூழலிலும்  கூட கண்ணகி, தான் முருகேசனுடன் மட்டுமே வாழ்வேன் என்று ஆணித்தனமாக கூறினார். இந்தக் காட்சி ஒரு திரைப்படத்தின்  இறுதிக் காட்சி போன்று நமக்குத் தோன்றினாலும், சாதி,மதம் என்கிற அனைத்து அதிகாரங்களையும் தாண்டி தன் சுயவிருப்பத்தை, சுதந்திரத்தை, காதலை இவர்கள் ஒரு துளியாவது உணரக்கூடும் என்கிற கடைசி நம்பிக்கையின் குரலாகத் தான் அது எதிரொலித்திருக்கக்கூடும்.

இந்நிலையில், இருவரின் கை,கால்களைக் கட்டிப் போட்ட அவர்கள் , இறுதியாக இருவர் கையிலும் விஷப் பாட்டில் கொடுக்கப்பட்டு குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளனர். விஷத்தைக் கையில் வாங்கிய கண்ணகி அதைக்  குடித்து விட்டார். ஆனால் முருகேசன் குடிக்க மறுத்ததனால் அவரது வாயில் கட்டையை வைத்து வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றினார்கள்.

இந்த மொத்த சம்பவம் நடந்தேறும்போது அங்கிருந்த ஊரார் ஒருவர் கூட கேள்வி எழுப்பவில்லை.  கண்ணகியும், முருகேசனும் எழுப்பிய அழுகுரலும், வெதும்பல்களும் அங்கு அவர்களின் உடலைச் சுடுவதற்குகாகக் காத்துக்கிடந்த தீயின் தகிப்போடு சுட்தெறித்துக் கொண்டிருந்தது. அங்கு அதனை விரும்பாத ஒருவராவது இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களின் நீதிக்கு எதிர்திசையில் தான் நின்றிருக்கக்கூடும்.  அங்கு நிலவிய  நீதியின் மௌனம்  அநீதியின் சுவடாக நந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலை வரை   தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது.

‘இலங்கைப் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்திய அரசு துணை நிற்க வேண்டும்’ – ராமதாஸ்

இந்நிலையில், கண்ணகி- முருகேசன் இருவரின் உயிரும் பிரிந்த நிலையில் அவர்களின்  உடல் தனித்தனியே தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து  முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் காவல்நிலையத்தில்  புகார் அளிக்கச் சென்ற நிலையில்,  அதனைத் தற்கொலை என்று கூறி காவல்துறையினர் ஏற்க மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக நக்கீரன் இதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சம்பவம் நடந்து 18 நாட்கள் கழித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு பெறப்பட்டு முருகேசன் தரப்பில் நான்கு பேர் கண்ணகி தரப்பில் நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அந்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 2004ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு  சார்பாக  மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் களமிறங்கி, இந்த வழக்கில் புலனாய்வுத்துறை விசாரணை கோரிய நிலையில்   சென்னை உயர்நீதிமன்றம் மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.

மணிப்பூரில் சமூக செயற்பாட்டாளர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கு – காவல்துறை நடவடிக்கை எடுக்காததற்கு மன்னிப்பு கோரிய முதலமைச்சர்

பின்னர், இந்த வழக்கை விசாரித்த   மத்தியப் புலனாய்வுத் துறை  கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு குறித்து அரண்செய்க்கு அளித்த சிறப்புப்  பேட்டியில்  குறிப்பிட்ட  வழக்கறிஞர் பொ.ரத்தினம்,

“2003-ல் தான் கண்ணகி முருகேசன் படுகொலை குறித்து நக்கீரன் இதழ் வழியாக தெரிய வந்தது. அதைப்  படித்துவிட்டு சென்னையிலிருந்து ஒரு வழக்கறிஞர், நெய்வேலியிலிருந்து வழக்கறிஞர்  துறைக்கண்ணு உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு கொலை நடந்த இடத்திற்குச் சென்றோம். நாங்கள் சென்ற ுன்று நாட்களுக்கு முன்னரே இரு தரப்பினரையும் கைது செய்து சென்றுள்ளனர்.

முருகேசனும் கண்ணகியும் அவர்களாகவே விஷம் குடித்து இறந்துவிட்டதால்  உடலை எரித்ததாக வழக்குப் பதியப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றம் மத்திய புலன் விசாரனை அமைப்புக்கு (சிபிஐ) வழக்கை ஆராய உத்தரவு வழங்கியது. சிபிஐ யும் வன்கொடுமை தடுப்பு சட்த்தில் வழக்கை பதியவில்லை. வெகுநாட்கள் கழித்து அந்தப்பிரிவில் பதிந்தார்கள்.. முக்கியமாக முருகேசனுடைய சித்தாப்பவையும், இன்னொரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரையும் முருகேசனுக்கு விஷம் கொடுத்ததாக கூறி கைது செய்திருந்தனர். கண்ணகியையும் முருகேசனையும் மரத்தில் கட்டி வைத்து வன்னியர் தரப்புதான் என்று புரிய வைக்கவே நீதிமன்றத்தில் பல மனு அளித்தோம். வன்னியர்களுக்கு சில பட்டியல் சாதி வழக்கறிஞர்களும்   ஆதரவாக செயல் பட்டார்கள்”. என்று குறிப்பிட்டார்.

கடலூர் மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின  சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையின் போது  81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிப் போனார்கள்.

இதே போன்று, கடந்த 2௦17 ஆம் ஆண்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், கண்ணகி முருகேசன் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான புதுக்கூரைப்பேட்டை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த[217 ஆம் ஆண்டு]  மாதம் 31ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துப் போனார். அவரது மனைவி குற்றவாளிகள் சாட்சியம் அளிக்கக் கூடாது என்று மிரட்டியதால்தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்”. என்று குறிப்பிட்டிருந்ததையும் நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது.

lawyer rathnam who advocated in this case

இந்நிலையில், இத்தனை இடர்களையும் தாண்டி வழக்கறிஞர் பொ.ரத்தினத்தின் சீரிய உழைப்பாலும், தலித்திய அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் பக்கபலத்தாலும்  கண்ணகி- முருகேசன் இணையர்கள் கொல்லப்பட்டு  கிட்டத்தட்ட  17 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்திருக்கிறது.

இன்றைய தினம் கடலூர் கடலூர் மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின  சிறப்பு நீதிமன்ற அமர்வு வழங்கிய உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட  15 பேரில் இருவரை விடுவித்து, எஞ்சிய 13 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

ஒன்று முதல் மூன்று வரையிலான குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், 5 முதல் 8 வரையிலான குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும், வழக்கின் இரண்டாவது குற்றவாளியான கண்ணகியின் அண்ணனுக்கு மரணதண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மிகமுக்கியமாக 14 மற்றும் 15-வது குற்றவாளிகளான  விருதாச்சலம் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ( தற்போது ஆய்வாளராக உள்ளார்) மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து [தற்போது ஒய்வுபெற்ற  டி.எஸ்.பி] ஆகியோர்  இருவரும் பொய்யாக ஆவணத்தை ஜோடித்தார்கள் என்ற அடிப்படையில் இருவருக்கும் ஆயுள்தண்டனையும் தலா மூன்று லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் கொல்லப்பட்ட  முருகேசனுக்கு விஷம் கொடுத்தாக குற்றம்சாட்டப்பட்டிருந்த முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி , உறவினர் குணசேகரன் ஆகியோர் நிரபராதி என்று தீர்ப்பளித்துச் சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.

இந்தக் கொடூர ஆணவக்கொலை நடந்தேறி 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. பலருக்கு கண்ணகி- முருகேசன் ஆணவக்கொலையின் சுவடே மறந்து போயிருக்கவும் கூடும். ஆனால், கண்ணகியும், முருகேசனுமாக இங்குச் சாதியைக் கடந்து நேசிக்கக்கூடிய, தங்கள் வாழ்க்கையை திட்டமிடுதலோடு வாழமுனையும் உள்ளங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றனர். சாதி அவர்களைத் தொடர்ந்துக் கொண்டே இருகின்றது. அவர்களின் குரல்வளையை நெரிக்கிறது. தண்டவாளங்களில் தூக்கி வீசுகிறது. பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி வீசுகிறது.

கண்ணகியும் முருகேசனும் இன்று ஒருவேளை உயிர்பிழைத்து வாழ்ந்திருந்தால் நிச்சயாக சிறப்பாக வாழ்ந்திருப்பார்கள் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

கடந்த 2003 ஆம் ஆண்டின் போதே முருகேசன் வேதிப்பொறியியல் துறையிலும்,  கண்ணகி வணிகவியல் துறையிலும் பட்டம் பெற்றவர்.  கூடுதலதாக கூட்டுறவு துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் என்பது மிகவும் முக்கியமானது. மேலும்,அவர்கள் திருமணம் புரிந்து வாழ தீர்மானித்தபோது முருகேசன் திருப்பூரில் ஒரு வேலை ஒன்றையும் பெற்றிருந்தார். உண்மையில், வேலை கிடைக்கும் வரை அவர்கள் திருமணம் செய்து கொண்டதையும் கூட மறைத்திருந்தனர். இவ்வளவு நிதானமாக தங்கள் வாழ்க்கையை வாழ அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், ‘நான்  அமைதியாக இருக்க விரும்பினேன், ஆனால் என் வரலாறு என்னை அமைதியாக இருக்க விடவில்லை”. என்ற  ரோஹித் வெமுலாவின் வரிகளைப் போன்று அவர்களின் வரலாறும் அவர்களை அமைதியாக வாழவிடவில்லை.

இதைவிடக் நெஞ்சை உலுக்கக்கூடியது என்னவென்றால் கண்ணகி கொல்லப்படும்போது அவர் கருவுற்றிருந்தார் என்பது தான். கருவுற்றப் பெண் மரணமடைந்தால் சுமைதாங்கிக் கற்களை நட்டு அவர்களின் பாரத்தை இந்தப் பூமி தாங்கட்டும் என்ற வழக்காறு தமிழ் மரபில் உண்டு. அப்படியென்றால் சாதியின் ஆணவ வெறிக்கு பலியான கண்ணகிகளைப் போன்ற இன்னும் எத்தனை ஆயிரம்  சுமைதாங்கிகள் இந்த மண்ணுக்குள் புதையுண்டிருக்கும்??? என்று ஆற்றாமையும் ஏற்படுகிறது.

காலங்கள்  கடந்தாலும் தொடரும் ஆணவக்கொலைகள் கட்டுபடுத்தப்படுவதற்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். 18 வயதினைக் கொண்டவர்கள் சேர்ந்து வாழத் தடையில்லை என்று நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்ற அதேவேளையில், இங்குச் சாதி, மதம் கடந்து வாழவிரும்புபவர்களின் உரிமையைப் பாதுகாக்க கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.  கண்ணகி – முருகேசன் வழக்கில் கிடைத்திருக்கும் நீதி ஜனநாயகத்தின் காலம் தாழ்த்திய இதயத்துடிப்பு!

 

 

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்