மகாத்மா காந்தி குறித்து, நடிகர் கங்கனா ரணாவத்தின் தற்போதைய கருத்து மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பத்மஸ்ரீ விருது பெற்ற திரைக் கலைஞர் கங்கனா ரணாவத், “பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சிதான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014 ஆம் ஆண்டுதான் சுதந்திரம் கிடைத்தது. 1947 ஆம் ஆண்டு நமக்கு கிடைத்தது பிச்சைதான்” என்று கூறியிருந்தார்.
அக்கருத்து கடும் கண்டனங்களை பெற்றதுடன், அவருக்கு வழக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், நேற்று(நவம்பர் 16), தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஒரு பழைய செய்தித்தாள் கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். அத்தோடு, “நீங்கள் காந்தி ரசிகரா அல்லது நேதாஜி ஆதரவாளர். நீங்கள் இருவருமாக இருக்க முடியாது. நீங்களே தேர்வு செய்து முடிவு செய்யுங்கள்” என்று கங்கனா ரணாவத் எழுதியுள்ளார்.
1940களில் வந்த அந்த செய்தித்தாள் கட்டுரையின் தலைப்பில், ‘காந்தியும் மற்றவர்களும் நேதாஜியை ஒப்படைக்க ஒப்புக்கொண்டார்கள்’ என்று இருந்தது.
தனது அடுத்த ஸ்டோரியில், “ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கு தைரியம் இல்லாத இவர்கள், அதிகாரப் பசியுடனும் தந்திரத்துடனும் இருந்தவர்கள். இவர்களால்தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று அவர் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியை தாக்கி பேசியுள்ள கங்கனா ரணாவத், “யாராவது நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள் என்று இவர்கள்தான் நமக்கு கற்றுக் கொடுத்தவர்கள். இப்படித்தான் உங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். ஆனால், அப்படி ஒருவர் சுதந்திரம் பெற முடியாது. பிச்சையை மட்டுமே ஒருவர் பெற முடியும். உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள். பகத் சிங் அல்லது சுபாஷ் சந்திரபோஸை காந்தி ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனவே, நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதை நீங்களேதான் தேர்வு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஏனென்றால், உங்கள் நினைவுகளில் அனைவரையும் போட்டு வைத்து, ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அனைவரையும் அவர்கள் பிறந்தநாளில் வாழ்த்துவது மட்டும் போதாது. இச்செயலானது மிகவும் பொறுப்பற்றதும் மேலோட்டமானதும் ஆகும். நம்முடைய வரலாற்றையும் நம் ஹீரோக்களை நாம் அறிந்திருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source: ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.