Aran Sei

தனியார் கப்பல் மோதியதால் மாயமான தமிழக மீனவர்கள்: கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க முதல்வருக்கு கமல்ஹாசன் கடிதம்

ழ்கடலில் கப்பல் மோதியதால் மாயமான மீனவர்களைக் கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 23) கமல்ஹாசன் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் ஐ.எப்.பி. ரப்பா விசைப்படகில் கடந்த ஏப்.11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 14 மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். ஏப்.13 அன்று நள்ளிரவில் விசைப்படகு மங்களூரிலிருந்து 55 கடல் மைல் தூரத்தில் தெற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த ஏ.பி.எல் லீ ஹாவ்ரே (APL LE HAVRE) என்ற தனியார் கப்பல் ஒன்று மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.” என்று அச்சம்பவத்தை நினைவூட்டியுள்ளார்.

’தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள்; திராணி இல்லாத மத்திய அரசு’ – கொதிக்கும் மீன சங்கத்தினர்

“விசைப்படகில் இருந்த மீனவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 7 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். 6 மீனவர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட இருவரில் வேல்முருகன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். மீதமுள்ள 6 மீனவர்களைக் காணவில்லை. இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர், தாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு பிரான்ஸ் நிறுவனமான சி.எம்.ஏ. சி. ஜி. எம். (CMA CGM Transport company) ட்ரான்ஸ்போர்ட்ஸ் சார்ந்த பார்சல்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல், நிர்ணயிக்கப்பட்ட வேகம் 18.5 நாட்ஸ் (மணிக்கு 34.26 கி.மீ. வேகம்) வேகத்தைவிட, கப்பல் அதன் அதிகபட்சமான 19.5 நாட்ஸ் (மணிக்கு 36.11 கி.மீ. வேகம்) வேகத்தில் பயணித்ததால் விசைப் படகின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களில் 25 சதவீதம் மீனவ மக்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கப்பெறும் மீன்வளத்தில் சுமார் 35 சதவீதம் இங்கு கிடைக்கிறது. ஆனால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் இறப்பதும் காணாமல் மாயமாவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. தமிழக அரசு உடனே இந்தப் பிரச்சினையில் மீனவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.” என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தேசபக்தி வகுப்பெடுக்கும் பாஜக கச்சத்தீவை மீட்க தயங்குவது ஏன்? – திருமாவளவன் கேள்வி

“மாயமான மீனவர்களைக் கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். தமிழக அரசு குளச்சல் பகுதி மீனவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணத்தை உரிய நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதிவேகத்தில் கடலில் பயணித்த கப்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் முதல்வரிடம் கோரியுள்ளார்.

மேலும், “கடலில் கப்பல்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட புதிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் (A traffic separation scheme TSS) கரையிலிருந்து (from the sea shore ) 50 கடல் மைல் தூரம் ஆழ்கடலில், (50 நாட்டிகல் மைல் ) புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது வெகுகாலமாக மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. மீனவர்கள் பரிந்துரைக்கும் வழித்தடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் கடலில் ஏற்படும் விபத்துகள் குறைய 90 சதவீத வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு மீனவர்களில் வாழ்வாதாரம் பாதுக்காக்கப்பட மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்